புனித் ராஜ்குமாருக்கு விருது..பெங்களூர் சென்றடைந்தார் ரஜினி..சிறப்பான வரவேற்பு!
பெங்களூர் : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித்ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மயங்கி விழந்தார்.
உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னட ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் பெங்களூர் காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் திரைத்துறையில் பணியாற்றி கொண்டே, மற்றொருபுறம் சமூக சேவைகளை செய்து வந்துள்ளார்.

கர்நாடக ரத்னா விருது
சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்து கன்னட திரைத்துறையில் தனக்கு என்று தனி முத்திரை பதித்தார். அவரது இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, புனித் ராஜ்குமாருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

பெங்களூரில் ரஜினி
அதன்படி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று மாலை 4 மணிக்கு விதான சவுதா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். இவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்
இந்த விழாவில், அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்குகிறார். இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாக கர்நாடக சபாநாயகர் காகேரி, ரகுநாத் மல்காபுரே, ஜூனியர் என்.டி.ஆர், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10வது நபராக புனித் ராஜ்குமாருக்கு அவரது மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் 1992-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











