இரண்டு மாத உழைப்பு மொத்தமா வீணாய்ப் போச்சு! தயவு செய்து இப்படி செய்யாதீங்க..வேதனையில் லோகேஷ் கனகராஜ்
சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ படங்கள் வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் நாகர்ஜுனா. இவர் இந்தப் படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது. கூலி படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. படத்தில் சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நாகர்ஜுனா நடித்த காட்சிகளை யாரோ வெளியிட்டுள்ளதாக இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வேட்டையன் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதன் பின்னர் கமிட்டான தனது 171 வது படமான கூலி படத்தில் நடித்து வருகின்றார். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பட ரிலீஸ்க்குகான வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
கூலி: வேட்டையன் படத்தினை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கூட, வேட்டையன் படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

விபத்து: கூலி படத்தினைப் பொறுத்தவரையில், படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. அண்மையில் அங்கு கனமழை பெய்தபோதுகூட படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கூலி படத்தின் படப்பிடிப்பின்போது சிறிய விபத்து ஏற்பட்டதாகவும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தகவல்கள் வெளியானது.

நாகர்ஜுனா: இந்நிலையில் கூலி படத்தின் சண்டைக் காட்சிகளை மறைமுகமாக படத்தில் இருந்து எடுத்த மர்ம நபர்கள் அதனை இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதுமட்டும் இல்லாமல், இந்த சண்டைக் காட்சிகள், முழுக்க முழுக்க நாகர்ஜுனா நடித்த காட்சிகள் என்பது தெளிவாகின்றது. ஒருபுறம் இந்தக் காட்சிகளை குபேரா படத்தின் காட்சிகள் என சிலர் கூறினாலும், குபேரா படம் நேரடி தெலுங்கு படம். ஆனால் இணையத்தில் பரவி வரும் வீடியோவில், நாகர்ஜுனா நேரடியாக தமிழில் வசனம் பேசுகின்றார்.

வேதனை: மொத்தத்தில் இந்த வீடியோ கூலி படக்குழுவினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், " ஒரு பதிவினால் பலரின் இரண்டு மாத கடின உழைப்பு வீணாய்ப்போனது. ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











