Vettaiyan Box Office:மூன்றாவது வாரம் ஆச்சு.. என்னப்பா வேட்டையன் சத்தத்தையே காணோம்? எவ்வளவுதான் வசூல்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி, ரமேஷ் திலக் என பலர் நடித்திருந்தனர். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். படத்தினை ஜெய் பீம் இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கினார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முழுவதுமாக முடிந்து மூன்றாவது வாரம் தொடங்கிய நிலையில் படக்குழு படத்தின் வசூல் குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
வேட்டையன் படம் தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 900 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டது. இதில் மல்டி ஃப்ளக்ஸ் ஸ்கிரீன்களைக் கணக்கில் கொண்டால் அது 1300க்கு மேல் வரும் என கூறப்படுகின்றது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆனது. இப்படியான நிலையில், படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. ஆனாலும் படத்தின் வசூலில் தமிழ் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் பெரிதாக கவனம் ஈர்க்கும் அளவிற்கு இல்லை எனவும் பேச்சுகள் எழுந்தது.

காரணம், அமிதாப் பச்சன் படத்தில் நடித்திருந்தாலும் படத்தின் முதல் நாள் வசூல் லட்சங்களில்தான் இருந்தது. படம் வெளியாகி நேற்றுடன், 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் இந்த 15 நாட்களிலும் இந்தியில் கவனம் ஈர்க்கும் வசூல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக படம் ரிலீஸ் ஆன நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் படத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
கனமழை: இதனால் படம் முதல் நான்கு நாட்களில் ஏற்கனவே கூறியதைப்போல் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்தது. இதற்கிடையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டிலேயே அதிக திரையரங்குகளைக் கொண்ட இந்த நான்கு மாவட்டங்களும் மழையால் ஸ்தம்பித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வசூல்: இதனால் மக்கள் பெரிய அளவில் படம் பார்க்க வரவில்லை. இதனால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இரண்டு முதல் மூன்று நாட்கள் மக்கள் மழையால் பாதிப்படைந்தனர். அதன் பின்னர், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில நாட்கள் எடுத்துக் கொண்டதால், படத்தின் வசூலில் பெரிய அடியே விழுந்தது எனலாம். ஆனாலும் படம் மற்ற நாட்களில் செய்த வசூல் ரூபாய் 300 கோடிகளில் இருந்து ரூபாய் 350 கோடிகள் வரை இருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி: ஆனாலும் படக்குழு, படம் வணிக ரீதியாக பிரமாண்டமான வெற்றி பெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டாரை அவரது வீட்டில் சந்தித்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினர். பொதுவாகவே தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டது. அதாவது படத்தின் வசூலை அவ்வப்போது தெரிவிப்பது. ஓடிடியில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் படத்தின் வசூல் குறித்து குறைந்தது மூன்று முறையாவது சொல்லிவிடவேண்டும் என்ற நெருக்கடியை தயாரிப்பாளர்களே உருவாக்கிக் கொண்டனர். அவ்வாறு வசூல் குறித்து தெரிவிக்கவில்லை என்றால், அப்படத்தை திரையுலகம் தோல்விப் படங்களின் பட்டியலில் சேர்த்து விடுகின்றது. மேலும் வசூல்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதால், படத்தின் வெற்றியைக் கொண்டாட ரசிகர்களும், படத்தின் வசூல் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். படக்குழு விரைவில் வசூல் குறித்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











