Jailer 2 Update: நெல்சன் என்னதான் செய்யறாரு.. தலைவர் கொடுத்த தரமான அப்டேட்.. பிறந்தநாள் பரிசு உறுதி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன. கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் ஒன்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தனது தமிழ் சினிமா வாழ்க்கையில் 50 வது ஆண்டை தொடங்கவுள்ளார் சூப்பர் ஸ்டார். இதனைக் கொண்டாடும் விதமாகத்தான் கூலி படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் அவரது 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக தென்னிந்திய சினிமா தொடங்கி, பாலிவுட் சினிமா வரை பல ஸ்டார்கள் கூலி படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ரஜினிகாந்த் பேட்டி: இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 172 வது படமான ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் நடைபெற்றது. மூன்றாவது கட்டமாக படத்தின் படப்பிடிப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வருகிறது. கோழிக்கோட்டில் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதாவது மே 22ஆம் தேதி சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஜெயிலர் 2 படம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜெயிலர் 2 அப்டேட்: அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, " படம் சிறப்பாக வந்து கொண்டுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நன்றாக நடந்து கொண்டு உள்ளது. டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவு பெறும்" என்று தெரிவித்துள்ளார். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதம் முடிவு பெறும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள், சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்குள் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்துவிடுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











