Rajinikanth Health: எங்களுக்கு தலைவர் குணமாகனும்.. அங்கபிரதட்சனம் செய்த ரஜினிகாந்த் ரசிகர்கள்
தூத்துக்குடி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் வெளியானதும் ஒட்டுமொத்த திரையுலகம் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சிகுள்ளானார்கள். இதுவரை மருத்துவமனைத் தரப்பில் இருந்துதான் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் எதுவுமே கூறாமல் இருப்பது தலைவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். குறிப்பாக கோவில்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் அங்கபிரதட்சனம் மேற்கொண்டனர். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக மட்டும் இல்லாமல் உச்ச நடிகராகவும் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வரும் 10ஆம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, கூலி படத்தின் படப்பிடிப்பு என அனைத்திலும் இரவு பகலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயங்கி வருவதால் அவரது உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் தொடக்கத்தில் தெரிவித்தனர்.

மருத்துவ அறிக்கை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், " இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், transcatheter முறையில் அந்த ரத்த நாளத்தில் stent பொருத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதால் அவர் நலமாக உள்ளார் எனவும், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர்: மருத்துவமனை கொடுத்துள்ள இந்த அறிக்கை பலருக்கும் மன நிம்மதியைக் கொடுத்தாலும், அவரது ரசிகர்களுக்கு தலைவர் வீடு திரும்பினால்தான் நிம்மதி என்ற மனநிலையில் உள்ளனர். சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் எதுவும் கூறாமல் இருப்பதும் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது. மேலும் அமைச்சர் மா. சுப்ரமணியம், சூப்பர் ஸ்டார் உடல்நிலை குறித்து பேசும்போதுகூட ரஜினிகாந்த் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் எனத் தெரிவித்தார்.

அங்கபிரதட்சனம்: இருப்பினும் சூப்பர் ஸ்டார் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அமைந்துள்ள கதிர்வேலன் முருகன் கோவிலில் அங்கபிரதட்சனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இது பலரையும் நெகிழ வைத்துள்ளது. மேலும் மருத்துவ அறிக்கையின்படி இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











