மனசுக்குள்ள இருக்காதா? அஜித்திற்கு பத்ம பூஷன்.. ஒற்றை வார்த்தையில் ரியாக்ட் செய்த சூப்பர் ஸ்டார்!
சென்னை: நடிகர் அஜித் குமார் கடந்த 28ஆம் தேதி நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் அஜித் விருது பெற்ற புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும், தங்களுக்கு என எந்த பின்னணியும் இல்லாமல், தங்கள் மீதான நம்பிக்கை மற்றும் திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சீனியர் என்பதாலோ என்னவோ, அஜித் மீது அவருக்கு தனி பிரியம் எப்போதும் இருந்து வந்துள்ளது. அஜித் நெருக்கடியான காலங்களில் இருந்த போது எல்லாம், அவருக்கு உறுதுணையாக நின்றவர்களில் ரஜினிக்கு மிகவும் முக்கியமானவர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி முன், அவரது கட்சி அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்து குற்றச்சாட்டை அஜித் மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் மேடையில் நின்று பேசிய போது, எழுந்து நின்று கை தட்டியவர் ரஜினிகாந்த். அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அஜித் குமார் சந்திப்பு ஏற்பாடு செய்து, அஜித்திற்கு பக்கபலமாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்திடம் கொடுத்த புத்தகம் லிவிங் வித் தி ஹிமாலாயன் மாஸ்டர்ஸ். இந்த புத்தகத்தை அஜித் அவரது வாழ்வில் மிகவும் துயரமான கால கட்டத்தில் இருந்தபோது ரஜினி கொடுத்ததாகவும், அதன் பின்னர்தான் தனது வாழ்க்கை முழுவதும் மாறியதாகவும் அஜித் தனது பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும். அப்படி இருக்கும்போது, அஜித் குமார் தற்போது விருது பெற்றுள்ளார். இப்படியான நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்த சூப்பர் ஸ்டாரிடம் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ரியாக்ஷன்: இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சூப்பர் ஸ்டார் பதில் அளிக்கும் போது, " ரொம்பவும் மகிழ்ச்சி, வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் இந்த ரியாக்ஷனைப் பார்த்த பலரும், சூப்பர் ஸ்டார் எப்போதும் போல தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு உளமாற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என பேசிவருகிறார்கள். அஜித் நாளை அதாவது மே 1ஆம் தேதி தனது 54 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இன்றைய நாளில் அஜித்தின் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதாவது வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் அவரது 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பதை ஆதிக் அண்மையில் தெரிவித்தார். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











