ஜெயிலர் ஷூட்டிங்.. ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்த்.. அசரவைத்த ஓட்டல் ஊழியர்கள்!
சென்னை : ஜெயிலர் பட ஷூட்டிங்கிற்காக ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்துக்கு ஹோட்டல் ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடி வரவேற்பு அளித்தனர்.
சூப்பர் ஸ்டார் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, நின்னா ஸ்டைல்... நடந்தா ஸ்டைல்... பார்த்தால் ஸ்டைல் என அவரை அணுவனுவாக ரசிப்பதற்கு என்றே உலகம் முழுவதும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
அவரது பேர கேட்டாலே ரசிகர்களுக்கு அதிரும், அந்த அளவுக்கு ரஜினிக்கு மக்கள் இடத்தில் தனி மரியாதை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த முறை அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அண்ணா தங்கை செண்டிமென்ட் கொண்ட இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். நயன்தாரா,மீனா, குஷ்பு,லிவிங்ஸ்டன்,சூரி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இல்லை.

ஜெயிலர்
இதனால், தனது அடுத்தபடம் சும்மா டெரராக இருக்க வேண்டும் என்று விரும்பிய ரஜினிகாந்த் பல இயக்குநர்களுடன் கதை கேட்டு, கடைசியாக கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்துள்ளார். ரஜினியின் 169வது படமான இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டு தரமான போஸ்டர் வெளியானது.

படத்தின் கதை
நெல்சனின் முந்தைய படங்களைப் போல டார்க் காமெடி படமாக இல்லாமல் இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஜெயிலராக நடித்துள்ளார். சிறையில் இருந்து சில கைதிகள் பயங்கரமாக திட்டம் ஒன்றை போட்டு தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அதை ரஜினி எப்படி நிறுத்துகிறார் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது தான் ஜெயிலர் படத்தின் கதை.

ஆடல் பாடலுடன் வரவேற்பு
ஜெயிலர் திரைப்படத்தின்70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்த கட்டபடப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் சென்றுள்ளார். நேற்று மாலை ஓட்டலுக்கு சென்ற ரஜினிக்கு ஓட்டல் ஊழியர்கள் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்சை அசத்தலாக ஆடி வரவேற்பு கொடுத்தனர். மேலும், தலைவா தலைவா அனைத்து ஊழியர்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்த்தினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











