ஜெய்பீம் இயக்குநருடன் இணையும் ரஜினி?.. ஆச்சரியத்தில் கோலிவுட்
சென்னை: ஜெய்பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் த.செ. ஞானவேலுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வேகமாக பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தர்பார் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். குடும்ப உறவுகள் தொடர்பாக சிவா எடுத்த வீரம், விஸ்வாசம் படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் ரஜினியுடன் அவர் இணைந்த அண்ணாத்த படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்ததில் அதிக ட்ரோல்களை சந்தித்ததும் அண்ணாத்த படம்தான். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அதிகமாகவே அப்செட்டாகினர்.

இளம் இயக்குநருடன் இணைந்த ரஜினி
ரஜினிகாந்த்தும் அண்ணாத்த படத்தின் ரிசல்ட்டால் கொஞ்சம் அப்செட்டானார் என்றே கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. தர்பா, அண்ணாத்த என்ற இரண்டு படங்களின் தோல்வியை அடுத்து உடனடியாக ரஜினிக்கு ஒரு ஹிட் தேவை என்ற சூழல் உருவானது. இதனால் இளம் இயக்குநருடன் இணைய அவர் முடிவெடுத்தார். அதன்படி டாக்டர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமார் ரஜினியின் அடுத்த படத்துக்கு இயக்குநராக கமிட் செய்யப்பட்டார்.

பீஸ்ட்டால் நெல்சனுக்கு வந்த சோதனை
ஆனால் அவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியடைந்து கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. ட்ரோல்களையும், விமர்சனத்தையும் கண்ட ரஜினி தரப்பு அவசரப்பட்டு நெல்சனை கமிட் செய்துவிட்டோமோ என்று யோசிக்க தொடங்கியதாக கூறப்பட்டது. அதன் வெளிப்பாடாக ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார். இல்லை இல்லை நெல்சன் இயக்கும் படத்தின் கதை இலாகாவில் கே.எஸ்.ரவிக்குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

ஜெயிலராக மாறிய ரஜினிகாந்த்
இருப்பினும் ஒருவழியாக ரஜினியின் படத்தை நெல்சனே இயக்குகிறார் என்று ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உறுதியானது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படி பல நட்சத்திரங்கள் நடிப்பதால் ஜெயிலர் படத்தின் மீது பலரது கவனமும் திரும்பியிருக்கிறது. பீஸ்ட் படம் கொடுத்த மோசமான அனுபவத்தை நெல்சன் இந்தப் படம் மூலம் போக்கிக்கொள்வாரா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெய்பீம் இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினி
ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி உருவாக ஆரம்பித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவிவருகிறது.

முஸ்லீம் போலீஸாக நடிக்கிறாரா ரஜினி?
இந்தப் படமானது உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படவிருப்பதாகவும், படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே உண்மை கதையை மையமாக வைத்துதான் ஜெய்பீம் படத்தை இயக்கினார் ஞானவேல். தற்போது ரஜினியை வைத்து எடுக்கப்போகும் படமும் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படவிருக்கிறது என சொல்லப்படுவதால் இந்தப் படமும் பெரும் விவாதத்தை கிளப்பலாம். அதுமட்டுமின்றி உண்மைக் கதையில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒத்துக்கொண்டிருப்பது நிச்சயம் ஆரோக்கியமான மற்றும் ஆச்சரியமான விஷயமே என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications











