Vettaiyan Audio Launch: தலைவர் தரிசனத்துக்கு ரெடியா? வேட்டையன் இசை வெளியீட்டு விழா அப்டேட் இதோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஜெய் பீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். லைகா புரெடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து, டப்பிங் பணிகளும் பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படத்தின் முதல் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது பெரும் ஆவல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலும், அதற்கு இணையான காரணமாக இயக்குநர் ஞானவேல்-ஐக் குறிப்பிடலாம். தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம், நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு காலகட்டத்தை மட்டும் படமாக எடுத்து, சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல், தமிழ் நாடு அரசையே திரும்பிப் பார்க்கவைத்தார். இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இது மட்டும் இல்லாமல், இதே தேதியில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படமான கங்குவா படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக, வேட்டையன் படக்குழுவினரின் அறிவிப்புக்கு முன்னரே அறிவித்திருந்தனர். கங்குவா படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க, ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. ஏற்கனவே பேட்டி ஒன்றில், ஞானவேல் ராஜா மிகவும் முக்கியமான விஷயத்தை கூறியிருந்தார். அதில், " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்துடன் எங்களது படம் ரிலீஸ் ஆகாது" எனக் கூறியிருந்தார்.

கங்குவா: இந்நிலையில் அக்டோபர் 10ஆம் தேதியே இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது என அறிவிப்பு வந்துள்ளதால், கங்குவா படத்தின் ரிலீஸில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வேட்டையன் படத்தில் இருந்து ஒரு பாடல் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினரை ஷாக் அடையச் செய்தது. குறிப்பாக இந்தப் பாடலில் மனசிலாயோ என இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் லிரிக் வீடியோவை படக்குழு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது என பேச்சு அடிபடுகின்றது.

இசை வெளியீட்டு விழா: படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதிக்குள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இசை வெளியீட்டு விழாவை 20ஆம் தேதியே நடத்திவிடலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது என கூறப்படுகின்றது. இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் ரிலீஸ்க்கு 20 நாட்கள் முன்னாலே படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, அதன் பின்னர் படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக களமிறங்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் கருதுவதாக கூறப்படுகின்றது.

மஞ்சு வாரியர்: படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் பேட்டி ஒன்றில், வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு, " நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடிக்கின்றேன் என்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜெய் பீம் படத்தினை எடுத்த ஞானவேல் படத்தில் நடிப்பதுதான் எனக்கு மனதில் ஓடிக்கொண்டு இருந்தது" என கூறினார்.


Click it and Unblock the Notifications











