கோடிக்கணக்கில் கை மாறிய பணம்; வேட்டையன் ஓடி.டி உரிமத்தை தட்டித் தூக்கியது யார் தெரியுமா?
சென்னை: ஜெயிலர் படம் கொடுத்த தாறுமாறான வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம் வேட்டையன். இயக்குநராக தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் சூழலிலேயே அதிர்வை ஏற்படுத்திய இயக்குனர் தா.செ. ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்குகின்றார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படமான வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகர் பட்டியலில் இருக்கக்கூடிய பகத் பாசில், பாகுபலி படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ராணா, அவ்வளவுதான் முடங்கி விடுவார் என நினைத்துக் கொண்டிருக்கையில் ஹவ் வோல்டு ஆர் யூ என்ற படத்தின் மூலம் பிரம்மாண்டமான கம் பேக் கொடுத்த மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர்.

முடிந்த படப்பிடிப்பு: சென்னை மும்பை திருநெல்வேலி திருவனந்தபுரம் என இந்தியாவின் பல்வேறு இடங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது. இதை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. படம் ஏற்கனவே அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என லைகா நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகளும் பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தலைவர் 171: வேட்டையன் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதன் பின்னர் கமிட்டான தனது 171 வது படமான கூலி படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மேலும் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார் என்ற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கின்றார். அனிருத் ஒவ்வொரு படத்திற்கும் சூப்பர் ஸ்டாருக்காக இறங்கி வேலை பார்ப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி மற்றும் ஓ.டி.டி. ரைட்ஸ்: இந்நிலையில் வேட்டையன் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது வேட்டையன் படம் ஜூன் மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ளது என்றும் அதன் ஓ.டி.டி., உரிமைகளை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவலும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. குறிப்பாக இதுவரை ஓ.டி.டி தளத்தில் விற்பனையான படங்களிலேயே இந்தப் படத்திற்குத்தான் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பிரமாண்ட இசை வெளியீட்டு விழா: எப்படியோ வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி விட்டதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை லைகா நிறுவனம் கூடிய சீக்கிரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது எனவும் இந்தியன் 2 படத்திற்கு எப்படி லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தது அதேபோல் வேட்டையன் படத்திற்கும் மிகப் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











