ரஜினிகாந்த் இப்போ எப்படி இருக்காரு?.. சூப்பர் சுப்பு சொன்ன சூப்பரான விஷயம்.. ரசிகர்கள் நிம்மதி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவர் சீக்கிரமே குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நடிகர் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த சூப்பரான விஷயத்தை பகிர்ந்து தலைவர் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளார்.
ஹுகும் பாடலாசிரியர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற டைகர் கா ஹுகும் என்கிற பாடலை எழுதி ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்த்தியவர் தான் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். காவாலா பாடலை விட ரஜினிகாந்த் ரசிகர்களை வெறியேற்றியதே ஹுகும் பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விழாவில் கூட ஷாருக்கான் ஜெயிலர் படம் பற்றி பேசுவதற்கு முன்னதாக ஹுகும் ஹுகும் என சொல்லி விட்டுத்தான் பேசியிருந்தார். அந்தளவுக்கு அந்த பாடல் உலகளவில் ரீச் ஆனது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் சூப்பரா இருக்காரு: சூப்பர் சுப்பு யூடியூப் சேனலுக்கு தற்போது அளித்துள்ள பேட்டியில் சூப்பர் ஸ்டார் சூப்பரா இருக்காரு, அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. ரசிகர்கள் கவலைப்படும் அளவுக்கு எதுவுமே ஆகவில்லை. நாளை வீடு திரும்பி விடுவார் என சூப்பர் சுப்பு பேசியதை கேட்ட தலைவர் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
பாபா படத்துக்கு ஏகப்பட்ட கிசுகிசு: சூப்பர் ஸ்டார் நடித்த படங்களிலேயே பாபா படத்துக்கு இருந்ததை போல ஒரு கிரேஸ் இனிமேலும் வருமா? என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு ஏகப்பட்ட கிசுகிசுக்கள், தகவல்கள், அப்டேட்கள் என குவிந்துக் கொண்டே இருந்தன. ரஜினிகாந்துக்கு அம்மாவாக ரேவதி நடிக்கப் போகிறார் என்றும் விவேக் அந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் ஜோசியர் சிசுவின் மெய்யை அகற்றி விட வேண்டும் என்று சொன்னதால் தான் பாப்பாவில் இருந்து ப் எழுத்தை தூக்கிவிட்டு பாபா என டைட்டில் வைத்தார் ரஜினிகாந்த் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அப்போது கிளம்பின என மலரும் நினைவுகளையும் சூப்பர் சுப்பு ஷேர் செய்துள்ளார்.
வேட்டையன் ரிலீஸ்: வரும் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று அதன் டிரெய்லர் வெளியானது. அதில், ரஜினிகாந்துக்காக ஞானவேல் செதுக்கிய அந்த ஜெயில் ஃபிரேம்ஸை தலைவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜெய்பீம் படத்தை போலவே இந்த படமும் ஸ்ட்ராங்கான கன்டென்ட் படமாக அமையும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











