Vettaiyan Box Office Day 12: 'படுத்தே விட்டானய்யா' மொமண்ட்டுக்கு ஆளான வேட்டையன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இதற்கு முன்னர் ரிலீஸ் ஆன, ஜெயிலர் படம் கமெர்ஷியலாக நல்ல வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் மீதும் தனி எதிர்பார்ப்பு இருந்தது. இதுமட்டும் இல்லாமல், ஜெயிலர் படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 650 கோடிகள் வசூல் செய்தது. இதனால் வேட்டையன் படம் அதைவிட அதிக அளவு வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் படத்தின் பெயரே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பைக் கூட்டியது. படம் குறித்த அறிவிப்பில் சூப்பர் ஸ்டார் பேசிய " குறி வெச்சா இரை விழனும்" எனும் வசனம் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் 12 நாட்கள் ஆகின்ற நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ஏற்கனவே கூறியதைப்போல் வேட்டையன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படம். படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கினார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், ரமேஷ் திலக் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் ஞானவேலின் படம் என்பதால் படத்தில் கட்டாயம் சமூக அக்கறை கொண்ட கருத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் சூப்பர் ஸ்டார் படம் என்பதால் அதிரடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது எனவும் எதிர் பார்க்கப்பட்டது.

முற்போக்கு சினிமா: படம் ரிலீஸ் ஆனபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களையும் படம் திருப்தி செய்தது, ஞானவேல் ரசிகர்களையும் திருப்தி செய்தது. குறிப்பாக நீட் தேர்வு, நீட் தேர்வு கோச்சிங் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளை மற்றும் என்கவுன்ட்டர் - போலி என்கவுன்ட்டர் என அனைத்திற்கு எதிராகவும் இந்தப் படம் பேசியுள்ள அரசியல் பெரும்பான்மையான மக்களாலும் ரசிகர்களாலும் வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் போன்ற உச்ச நட்சத்திரம் இதுபோன்ற கருத்துச் செறிவுள்ள படத்தில் நடித்தது என்பது, தமிழ் திரைப்படச் சூழல் முற்போக்கான சிந்தனைகளை நோக்கி வேகமாக நகர்கின்றது என கருத்து தெரிவித்தனர்.

லைகா: படத்தினைத் தயாரித்த லைகா நிறுவனத்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் இல்லை, அதாவது வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள் இல்லை. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தாலும் வசூல் ரீதியாக பெரிய அடி என்றே கூறலாம். அதேபோல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படமும் லைகாவுக்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஆங்கிலத்தில் டிசாஸ்ட்டர் எனச் சொல்லுவதைப் போல, பெரிய பாதிப்பைக் கொடுத்தது.

வசூல்: இதற்கிடையில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இப்படி இருந்த லைகாவுக்கு கொஞ்சம் தெம்பு கொடுத்துள்ளது என்றால் அது வேட்டையன் படம்தான். இந்தப் படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. அதன் பின்னர் இதுவரை பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது அக்டோபர் 21ஆம் தேதியுடன் 12 நாட்கள் ஆகியுள்ளது. இந்த 12 நாட்களில் படம் ரூபாய் 325 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடிகள் வரை வசூல் ஆகியிருக்கும் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் படம் 12வது நாளில் ரூபாய் 5 கோடிகள் அல்லது 5 கோடிகளுக்கும் குறைவாக வசூல் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











