பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி‘ படத்தை பாராட்டிய ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநரை வெகுவாக பாராட்டி உள்ளார்.
இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் வீர சிம்ஹா ரெட்டி.
இத்திரைப்படத்தில், பாலகிருஷ்ணா, ஸ்ருதி ஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், நவீன் சந்திரா, ஹனி ரோஸ், பி.ரவி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

வீர சிம்ஹா ரெட்டி
துருக்கியில் அம்மா ஹனி ரோஸூடன் தனியாக வசித்து வருகிறார் ஜெய் சிம்ஹா ரெட்டி (நந்தமுரி பாலகிருஷ்ணா). ஸ்ருதி ஹாசனுக்கும் பாலகிருஷ்ணாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யும் போது தான், தனக்கு வீர சிம்ஹா ரெட்டி என்ற அப்பா இருக்கிறார் என்பது பாலகிருஷ்ணாவுக்கு தெரியவருகிறது. இதையடுத்து, வீர சிம்ஹா ரெட்டி யார்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இருவரின் பிரிவுக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அம்மாவையும் அப்பாவையும் மகன் சேர்த்து வைப்பது தான் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தின் கதை.

பாலகிருஷ்ணாவின் அட்ராசிட்டி
இந்த படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனுடன் காதல் சேட்டை, அடி தடி ஆக்ஷன், மசாலாத்தனமாக பாடல், டான்ஸ் என அனைத்திலும் சும்மா அட்ராசிட்டி செய்து இருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பாராட்டிய ரஜினி
இந்நிலையில் வீர சிம்ஹா ரெட்டி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், படத்தின் இயக்குனர் கோபிசந்த் மல்லினேனியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக, இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது எனக்கு நம்ப முடியாத ஒரு தருணம். ரஜினிகாந்த் சாரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வீர சிம்ஹா ரெட்டி படத்தை பார்த்த அவர் என்னை பாராட்டிய வார்த்தைகள், அவர் உணர்ந்த உணர்வுகள் ஆகியவற்றை விட இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமில்லை நன்றி ரஜினி சார் என்று கூறியுள்ளார்.

சோஷியல் மீடியாவில் சர்ச்சை
அண்மையில் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், பாலகிருஷ்ணாவும் ஹீரோயின் ஹனி ரோஸும் கைகளை கோர்த்தபடி ஷாம்பெய்ன் குடித்த புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











