Vettaiyan Box Office Day 7: அடித்து துவைக்கும் மழை.. அசராமல் வசூல் செய்யும் வேட்டையன்.. விவரம் இதோ
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. ஆனாலும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி கடந்த 15ஆம் தேதியில் இருந்துதான் வடக்கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது வேட்டையன் படத்தினைப் பார்க்க தியேட்டரில் கணிசமான அளவே ரசிகர்கள் வந்தார்கள். படம் வெளியாகி நேற்றுடன் 7 நாட்கள் ஆகின்றது. அந்த 7 நாட்கள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இப்படம் வெளியானது. படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படம் ஆகும். படம் என்கவுன்டர் குறித்தும் நீட் தேர்வு, நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்கள், நீட் தேர்விற்கு கோச்சிங் கொடுக்கின்றோம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளை ஆகிவற்றை மையமாகக் கொண்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்ஸ்டாகிராமிற்குள் நுழைந்தாலே மனசிலாயோ பாடலின் ரீல்ஸ்தான் குவிந்தது. தனது பாடலுக்கு தானே ரீல்ஸ் செய்து அசத்தியிருந்தார் சூப்பர் ஸ்டார். கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வெளியானது. அதேபோல் ஹண்டர் வண்டார் பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டதாக தகவல்கள் உலா வந்தது.

கருத்து: படம் பார்த்த ரசிகர்கள் சமூக அக்கறை கொண்ட படம், இந்தியா முழுவதும் படத்தினை திரையிட வேண்டும். அந்த அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கான மாஸ் காட்சிகளும் படத்தில் உள்ளது. அதேபோல் ஞானவேல் தான் சொல்ல வந்ததையும் சொல்லிவிட்டார். அனைத்து பள்ளிகளிலும் படத்தினை திரையிடவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
என்கவுன்டர்: படத்தின் டிரைலரைப் பார்த்ததும் படம் என்கவுன்டருக்கு ஆதாரவான கருத்தினை மைய்யப்படுத்தி உள்ளதோ என ரசிகர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் படம், என்கவுன்டருக்கு எதிரான கருத்தினை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

வசூல்: படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின்னர் கனமழை அதிகரித்ததால், மக்கள் பெரிதாக படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல காட்சிகள் மிகவும் குறைவான ரசிகர்களுகே திரையிடப்பட்டது. இந்நிலையில் படம் முதல் 7 நாட்களில் ரூபாய் 270 கோடிகளில் இருந்து ரூபாய் 275 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











