தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எப்படி தடை விதிக்கலாம்.. மேற்குவங்காள அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை : தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்தது ஏன் என விளக்கம் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி.
இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி வெளியானது

தி கேரளா ஸ்டோரி : பாலிவுட் நடிகை அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ள தி கேரளா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
மேற்கு வங்க அரசு தடை : தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்ததை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ் : படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம் திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உரிய பதில் அளிக்க ஆணை : மேலும், தமிழகத்தில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











