நடிகர் கவுண்டமணிக்கு நீதி கிடைத்தது.. நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
சென்னை: நடிகர் கவுண்டமணியின் இடத்தை அவரிடமே திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து கவுண்டமணிக்கு நீதி கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ் வேறு யாருக்கும் கிடையாது. காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி பாணியை தான் இன்று வரை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

செந்தில் கவுண்டமணி ஜோடி: தமிழகத்தின் லாரல் மற்றும் ஹார்டி என்று புகழப்பட்ட ஜோடி கவுண்டமணி, செந்தில் ஜோடி. எண்பதுகளில் கவுண்டமணி இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு ஏராளமான படங்களில் நடித்தனர். தொன்னூறுகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார் கவுண்டமணி. ஆனால் கடந்த 2000 ஆண்டுக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
ஒத்த ஓட்டு முத்தையா: தற்போது, கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், யோகி பாபு மட்டுமின்றி சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கவுண்டமணி நில விவகாரம்: கடந்த 1996ம் ஆண்டு நளினி பாய் என்பவருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை நடிகர் கவுண்டமணி விலைக்கு வாங்கினார். அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் அளித்து, 22,700 சதுர அடி பரப்பளவிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என இரு தரப்பும் கட்டுமான பணிக்காக 3 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் போட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு: ஆனால், 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை நடிகர் கவுண்டமணி, கட்டுமான நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். ஆனால் 2003ம் ஆண்டு வரை எந்தவிதமான கட்டுமான பணியும் தொடங்கப்படாததால், கவுண்டமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
உறுதி செய்தி நீதிமன்றம்: அதில், 63 லட்சம் ரூபாயை, நடிகர் கவுண்டமணி கட்டுமான நிறுவனத்திற்கு அதிகமாக கொடுத்துள்ளது தெரியவந்தது. எனவே அவரிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 2019ம் ஆண்டு அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, 2021ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டிருந்தது
உச்சநீதிமன்றம் உத்தரவு: இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நடிகர் கவுண்டமணியின் நிலம் மீண்டும் அவருக்கே கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











