ஜியா கான் தற்கொலையில் என் மகனை வில்லனாக்காதீர்கள்- ஆதித்ய பஞ்சோலி

பிரபல நடிகை ஜியா கான் கடந்த 4-ம் தேதி மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் கடைசியாக தனது நெருங்கிய நண்பரும், நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகனுமான சூரஜ் பஞ்சோலியிடம் நீண்ட நேரம் பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருக்கும் உள்ள காதல் முறிந்ததால் ஜியா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் சூரஜ் பஞ்சோலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தந்தையைப் போல் மகன் என்று சூரஜ் பற்றி கட்டுரையாளர் ஷோபா டே விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆதித்யா பஞ்சோலி, "ஜியா கான் விவகாரத்தில் காரணம் இல்லாமல் என் மகன் சூரஜ் பஞ்சோலியை வில்லன் ஆக்க வேண்டாம். அவர் குற்றம் செய்திருந்தால் அதன்பின்னர் அவரை வில்லன் ஆக்குங்கள்.
ஜியாவும், அவரது தாயாரும் (நடிகை ரபியா அமின்) எங்கள் நண்பர்கள். இந்த சம்பவத்தால் என் மகன் சூரஜ் மிகவும் வேதனை அடைந்துள்ளார். சூரஜ் நன்றாகிவிடுவான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஜியாவின் தாயார் மற்றும் சகோதரிகள் எப்போது இந்த துக்கத்தை மறந்து சாதாரண நிலைக்கு திரும்புவார்களோ? சூரஜின் துக்கத்தைப் பார்க்கும்போது, ஜியாவின் குடும்பத்தினர் படும் துயரம்தான் என் நினைவுக்கு வருகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











