அஜித்துக்கு என்ன ஆச்சு?.. கார் ரேஸில் அய்யோ இவ்வளவு பெரிய விபத்தா?.. பதற வைக்கும் வீடியோ
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. மகிழ் திருமேனியும், அஜித்தும் முதன்முறையாக இணைந்ததால் படம் தரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்ததாக ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கும் சூழலில்; கார் ரேஸில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார் அஜித். இந்தச் சூழலில் ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கடைசியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் கடந்த ஆறாம் தேதி வெளியானது. அவருடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைக்க; மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். முதன்முறையாக அஜித் - மகிழ் திருமேனி இணைந்திருந்ததால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. கண்டிப்பாக அனைவரும் விரும்பும்படி படம் இருக்கும் மெகா ஹிட்டாகும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தார்கள்.

சுமாரான வரவேற்பு: ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக விடாமுயற்சி அமையவில்லை. மாறாக ஸ்டார் வேல்யூவை அடித்து நொறுக்கி ஒரு குடும்ப பாங்கான படத்தை கொடுத்திருந்தார்கள். இது அஜித்தின் ரசிகர்களை பெரிதாக திருப்திப்படுத்தவில்லை. விமர்சன ரீதியாக அடி வாங்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை பாக்ஸ் ஆஃபிஸில் ஏற்படுத்தவில்லை. அடுத்த மாத இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகலாம் என்று கருத்துக்கள் நிலவிக்கொண்டிருக்கின்றன.
குட் பேட் அக்லி: சூழல் இப்படி இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அவர் ரம்யா எனும் கதாபாத்திரத்தை படத்தில் ஏற்றிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது. விடாமுயற்சி படத்தில் விட்டதை கண்டிப்பாக குட் பேட் அக்லி நிறைவேற்றும்; இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித்தை மாஸாக காண்பிக்கும் என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே கார் ரேஸில் உச்சக்கட்ட ஆர்வம் உடையவர் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடந்த கார் ரேஸ் ஒன்றில் ஏகே ரேஸிங் என்கிற தனது டீமுடன் களமிறங்கி மூன்றாவது இடத்தை பிடித்தார் அஜித். அந்த சமயத்தில்தான் அவருக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது. கார் ரேஸ் நடக்கும் சமயங்களில் கண்டிப்பாக படங்களில் நடிக்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார் அவர். இன்னும் 9 மாதங்களுக்கு அவர் தொடர்ந்து ரேஸில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
ஸ்பெயினில் விபத்து: இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றும்வரும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார் அஜித். தற்போது அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதாவது ரேஸின்போது அஜித்குமார் விபத்துக்குள்ளாகும் வீடியோதான் அது. இன்னொரு காரில் மோதி அவரது கார் பல டைவ்களை அடித்திருக்கிறது. நல்வாய்ப்பாக அஜித்துக்கு காயங்கள் எதுவும் இல்லை. மேலும் இந்த ரேஸில் அவர் 14ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "ஸ்பெயின் நாட்டின் வேலன்சியாவில் நடந்த கார் பந்தயத்தில் ஐந்தாவது சுற்று அஜித்துக்கு நன்றாக இருந்தது. போட்டியில் 14ஆவது இடத்தை பிடித்தார். ஆறாவது சுற்றுதான் துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது. மற்ற கார்கள் மோதியதன் காரணமாக இரண்டு முறை விபத்துகளை சந்தித்தார். அவர் தவறு எதுவும் செய்யவில்லை.விபத்துகளில் சிக்கினாலும் மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்டார். அவரது விடாமுயற்சி வலிமைமிக்கது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











