உண்மையை தெரிந்துகொள்ளும் முன்பு பொய்யை பிடிக்கிறோம்.. பாலாவுக்கு சுரேஷ் காமாட்சி ஆதரவு
சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
குற்றச்சாட்டு: பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் அடிப்பார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாகவே இருந்துவருகிறது. பரதேசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட குச்சியை வைத்து அவர் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் அது ஒரிஜினல் குச்சி இல்லை டம்மி குச்சி என்று பாலா கூறியிருந்தார். இந்தச் சூழலில் முதலில் வணங்கானில் சூர்யா நடித்தபோது அப்படத்தில் இருந்த நடிகை மமிதா பைஜு சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அடித்த பாலா: அந்தப் பேட்டியில் பேசிய மமிதா, "சூர்யா கமிட்டான வணங்கான் படத்தில் நான் முதலில் நடித்தேன். ஒரு சீனில் பாடிக்கொண்டே ஆட வேண்டும். அதற்கான பயிற்சியை நான் எடுத்தேன். ஆனால் டேக்கின்போது எனக்கு பதற்றமாகிவிட்டதால் சொதப்பிவிட்டேன். சில டேக்குகள் போயின. அப்போது பாலா பின்னிருந்து எனது தோள்பட்டையில் அடித்தார். நல்லவேளை அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்" என்றார். மமிதாவின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மமிதாவின் விளக்கம்: மமிதாவின் இந்தப் பேட்டியை அடுத்து இயக்குநர் பாலாவுக்கும் கண்டனங்கள் வலுக்க ஆரம்பித்தன. சூழல் இப்படி இருக்க, தனியார் ஊடகம் ஒன்றுக்கு இந்த விவகாரம் குறித்து பேசிய மமிதா, "நான் கொடுத்த நீண்ட பேட்டியில் சின்ன இடத்தை மட்டும் பரப்பி பெரிய விஷயமாக்கிவிட்டனர். நான் அதை முழுமையாக மறுக்கிறேன். பாலாவுடன் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அவரும், அவரது துணை இயக்குநர்களும் நன்றாகவே கவனித்துக்கொண்டார்கள். சூர்யா விலகிவிட்டதால் இந்தப் படம் மீண்டும் தொடருமா என்ற எண்ணத்தில்தான் நான் படத்திலிருந்து விலகிவிட்டேன்" என்றார்.
சுரேஷ் காமாட்சி ட்வீட்: இதனையடுத்து வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "உண்மையைத் தெரிந்துகொள்ளும் முன் பொய்யானதைப் பிடித்துக் கொள்கிறோம். அல்லது ஒருவரைப் பற்றிய தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். இயக்குநர் பாலா அண்ணன் படைப்புக்காக போராடக்கூடியவர். அதற்காக மெனக்கிடக் கூடியவர். பல கதாபாத்திரங்களை வேறொரு உலகத்தில் நின்று சிந்தித்து ஆக்கியவர். சம்பந்தப்பட்டவர்களின் உண்மையை அறியாமலே நாம் படபடத்துவிடுகிறோம் பல நேரங்களில்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











