பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
சென்னை: இசையமைப்பாளர் இமானின் 38வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்ப அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக தற்போது சன் பிக்சர்ஸ் சூர்யா 40வது படத்தில் இமான் இசையமைக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

38வது பிறந்தநாள்
1983ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி சென்னையில் பிறந்த டி. இமான் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 2002ம் ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் படங்களுக்கு
இசையமைப்பாளர் இமானுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நல்லா கெமிஸ்ட்ரி ஒத்துப்போயுள்ளது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, ரஜினிகாந்தின் அண்ணாத்த என அசத்தி வருகிறார்.
சூர்யாவின் 40வது படத்தில்
இசையமைப்பாளர் இமானின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். அவரும் பதிலுக்கு சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இமானுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது சன் பிக்சர்ஸ் சூர்யாவின் 40வது படத்திலும் நீங்க தான் இசையமைப்பாளர் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் யார்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. அந்த படத்தைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க உள்ள அவரது 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

மெலோடி கிங்
தமிழன், கிரி, தலைநகரம் என ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், 2011ம் ஆண்டு வெளியான மனங்கொத்தி பறவை, அதை தொடர்ந்து வந்த கும்கி உள்ளிட்ட படங்களில் இருந்து தான் இசையமைப்பாளர் இமான் அதிகளவில் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறார். தொடர்ந்து மண் சார்ந்த படங்கள் என்றாலே இமானை கூப்பிடுங்கப்பா என்கிற அளவுக்கு மாறிவிட்டார். மெலோடி பாடல்களை போடுவதில் இவர் கிங் என்றே சொல்லலாம்.

அண்ணாத்த தீபாவளி
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இமானின் இசையில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஓப்பனிங் சாங் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











