Suriya 43: முதலில் தம்பி... இப்போ அண்ணன்... வளைத்துப் போட்ட அதிதி ஷங்கர்... சூர்யா 43 மாஸ் அப்டேட்
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளாக விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி.
கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி, அடுத்து சிவாகார்த்திகேயனுடன் மாவீரனில் இணைந்தார்.
கார்த்தி, சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து அதிதி யாருடன் நடிக்கப் போகிறார் என அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், சூர்யாவின் 43வது படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் இளைய மகள் அதிதி சினிமாவில் நடித்து வருகிறார். விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே நடிகையாகவும் பாடகியாகவும் என்ட்ரி கொடுத்த அதிதிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார் அதிதி. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானதால், அதிதி ஷங்கருக்கு டோலிவுட்டிலும் நல்ல அறிமுகம் கொடுத்துள்ளது. இரண்டே படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகைக்கான ரேஸில் ஓடத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளராம் அதிதி ஷங்கர்.
கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து வாடிவாசலில் கமிட்டாகியிருந்தார். வெற்றிமாறன் இயக்கவிருந்த இந்தப் படம் தாமதமாவதால் அதற்கு முன்பாக சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார். ஏற்கனவே சூரரைப் போற்று படத்தில் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் கூட்டணி மாஸ் காட்டியது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கு தேசிய விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

இதனால் மீண்டும் சூரரைப் போற்று கூட்டணியுடன் இணைய முடிவெடுத்துவிட்டாராம் சூர்யா. அதன்படி சுதா கொங்கரா இயக்கவுள்ள 'சூர்யா 43' படத்தில் துல்கர் சல்மானும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இது ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது இதில் அதிதி ஷங்கரும் இணையவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் படத்திலேயே தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தார் அதிதி ஷங்கர். அதேவேகத்தில் அண்ணன் சூர்யாவுடனும் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனிடையே ஹரிஷ் கல்யாண், சிம்பு ஆகியோரின் ஜோடியாக மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் ஜோடியாக அதிதி நடித்தால், விரைவில் ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











