Suriya 50: ஜோதிகாவை கட்டிப் புடிச்சுட்டு அப்படி ஒரு போஸ்.. பிறந்த நாளில் கலக்குறாரு சூர்யா!
மும்பை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் இன்று அதாவது ஜூலை 23ஆம் தேதி தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது 50வது பிறந்த நாளில் அவர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மூத்த நடிகர் சிவக்குமாரின் முதல் மகன் சூர்யா. சரவணன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் சினிமாவுக்காக சூர்யா என மாற்றிக் கொண்டார். 1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவருக்கு, 2001ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார். இப்போது தனது 45வது படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார்.
உச்சம்: 45 வது படமான கருப்பு படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. கருப்பு படத்திற்கு முன்னர் ரிலீஸ் ஆன இவரது 44 படங்களில் வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்து விட்டார் சூர்யா. தேசிய விருது, ஆஸ்கார் நாமினேஷன்ஸ், ஆஸ்கார் தேர்வுக்குழு உறுப்பினர் என நடிகராகவும் தயாரிப்பாளராகவுமே சூர்யா உச்சம் தொட்டுவிட்டார். சினிமா நடிகராக மட்டும் இல்லாமல், சூர்யா மக்கள் பணிகளிலும் மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

நிறைவான வாழ்க்கை: அகரம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கான விளிம்புநிலை மக்களில் உயர்கல்விக்காக போராடுகிற மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றியுள்ளார். இவரது இந்த சமூக சேவை பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. 12ஆம் வகுப்பு வரை நன்றாக படித்து விட்டால், டிகிரி படிக்க வைக்க சூர்யாவின் அகரத்தை நாடலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளார். தனது விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாத அப்பா, அம்மா, தூண் போல நிற்கும் சகோதரன், சரியும் போது தோள் கொடுக்கும் மனைவி, பெற்றோராக பெருமைப்பட வைக்கும் குழந்தைகள், என சூர்யா மனிதராக நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த நிறைவான வாழ்க்கை சூர்யாவுக்கு பல்லாண்டுகள் நீடித்திட பிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.
பிறந்த நாள் கொண்டாட்டம்: சூர்யா தனது 50 வது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலையில் 50 என குறிப்பிடப்பட்டுள்ள தொப்பியை அணிந்து கொண்டு, ஜோதிகாவை கட்டிப்பிடித்தபடி சூர்யா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர், சூர்யாவும் ஜோதிகாவும் மட்டும் சீஷெல்ஸ் என்ற நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். அதனை பலரும் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி எனவும் கூறினார்கள். இந்த சுற்றுலா தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூர்யா கலைத்துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் அவரது குடும்பத்திற்கும் மேலும் மேலும் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











