Agaram Foundation: அகரம் 15வது ஆண்டு.. முன்னாள் மாணவியின் குழந்தைக்கு.. சூர்யா கொடுத்த கிஃப்ட்!
சென்னை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் அடையாளமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல், 'அகரம்' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வருகிறார். குறிப்பாக வறுமையின் உச்சத்திலும் படிப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் மாணவர்களை தமிழ்நாடு முழுவதும் தேடித் தேடி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி அகரம் பவுண்டேஷனின் 15வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் மொத்த குடும்பத்தினரும் அதாவது அவரது பெற்றோர்கள், தம்பி கார்த்தி, மனைவி ஜோதிகா, சூர்யா - ஜோதிகாவின் குழந்தைகள், கார்த்தியின் மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்த குடும்பமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மட்டுமல்லாமல், கமல்ஹாசன், வெற்றிமாறன், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்த அனைத்து மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.

இதில் 2010ஆம் ஆண்டு அகரத்தில் சேர்ந்து படித்த மாணவி ஒருவர், இன்றைக்கு தனது படிப்பை முடித்துவிட்டு, தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு உள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் அவர் தனது குழந்தையுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூர்யாவிடம் தனது மகளின் கல்வியை சூர்யா 'அ' போட்டு தொடங்கி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைக் கேட்ட உடனே சூர்யா மேடைக்கு வந்து, அந்த முன்னாள் மாணவியின் குழந்தையின் ஆள்காட்டி விரலைக் கையில் பிடித்து அரிசியில் 'அ' என எழுதினார். இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அதேபோல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல முன்னாள் மாணவர்கள் - முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் என்ன மாதிரியான பின்புலத்தில் இருந்து, அகரத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றியது என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்கள். தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பயன் பெற்றதை முன்னாள் மாணவர்கள் கூற கூற சூர்யா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி, கண்ணீர் சிந்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சூர்யாவையும் அவரது அகரம் பவுண்டேஷனின் தொண்டு தொடர வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











