Suriya X Ameer: இனி பஞ்சாயத்தும் இல்லை.. பகையும் இல்லை.. பேசாதவர்களை பேச வைத்த மௌனம் பேசியதே ரீ ரிலீஸ்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் மனக்கசப்புகளும் பிரச்னைகளும் இல்லாமல் பேரன்புடன் ஒரு படத்தை பணியாற்றுபவர்களையும் பகையாளியாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது தான் சினிமா தயாரிப்பு என்பது. இப்படி பகையாகி போனவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளார்கள். சில கடைசி வரைக்குமே அதே மனக்கசப்புடனே இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது இடையில் ஏற்பட்ட மிகப்பெரிய மன கசப்புக்கு பின்னர் மீண்டும் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் அமீர் என இருவரையும் ஒன்றாக இணைத்துள்ளது அவர்கள் இணைந்து பணியாற்றிய படமான மௌனம் பேசியதே ரீ ரிலீஸ்.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அமீர். இந்த படத்தை அப்ரஜித் பிலிம்ஸ் கணேஷ் படத்தை தயாரித்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியாகி சுமார் 23 ஆண்டுகளுக்குப் படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்தது படக்குழு.
மௌனம் பேசியதே, அமீர் - சூர்யா எனும் போது ரசிகர்கள் பலருக்கும் இயல்பகவே எழுந்த கேள்விகள் என்றால், அமீரும் சூர்யாவும் பேசிக் கொள்வார்களா? இருவரும் மீண்டும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்பதுதான். இப்படியான கேள்விகளுக்கு எல்லாம் காரணம், சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவான முதல் படமான பருத்திவீரன் படத்தின் போது ஏற்பட்ட பிரச்னை தான்.

அதாவது படத்தை முதலில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. ஆனால் பாதியில் தயாரிப்பாளர் ஞானவேல் பணம் தராததால், படத்தின் தயாரிப்புச் செலவை தன்னிடம் இருந்த பணத்தை வைத்தும், மீதியை தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் ஏற்பாடு செய்து படத்தை எடுத்து முடித்தார். பிரச்னை இங்குதான் ஆரம்பித்தது என்று கூறலாம்.
பிரச்னையின் ஆரம்பப் புள்ளி: அதாவது படத்தை முழுவதுமாக எடுத்து முடித்து, படத்தை தனது பெயரில் இயக்குநர் அமீர் சென்சாரும் வாங்கிவிட்டார். அதன் பின்னர் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் படத்தின் தயாரிப்பு செலவு என்று முன்கூட்டியே பேசிய தொகையை தான் கொடுப்பதாகவும் படத்தை தனக்கே கொடுக்கும் படியும் கேட்க, அமீர் தரப்பில் படத்திற்கான மொத்தச் செலவு என்பது எதிர்பார்க்கப்பட்ட தொகையை காட்டிலும் கூடுதலாக செலவாகி உள்ளது. எனவே அந்த தொகையையும் கொடுத்தால் தான் படத்தை உங்களுக்கு கொடுப்பேன் என்று அமீர் சொல்ல, பிரச்னை ஆரம்பமானது.
சூழல்: பாதியில் வெளியேறிய தயாரிப்பாளராகவே இருந்தாலும் படத்தை ஞானவேலையே ரிலீஸ் செய்ய வைக்க காரணம், நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தின் மீது இருக்கும் மரியாதை தான் என்றும், ஆனால் ஞானவேல் உடனான பிரச்னையில் சூர்யா தரப்பில் இருந்து தனக்கு ஆதரவு கிடைக்காதது பெரும் ஏமாற்றம் என்று அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மன சங்கடம்: கொரோனா காலகட்டத்தில் பருத்திவீரன் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறியது. மொத்த திரைத்துறையும் இது குறித்து விவாதித்துக் கொண்டு இருந்தது. இந்த விவாகரம் குறித்து அனைவரும் விவாதிப்பதற்கு முன்னர் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா கமிட் ஆனார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அமீரை கமிட் செய்துள்ளார். மேலும் அமீர் போன்ற மதுரையைச் சேர்ந்த ஒருவர் தனது குழுவில் இருப்பது படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெற்றி மாறன் நம்புகிறார்.
வாடிவாசல் ரூட் கிளியர்: உள்ளுக்குள் இருந்த பருத்திவீரன் பஞ்சாயத்தை ஊரே கேளு, நாடே கேளு என்பது போல எல்லோரும் பேசிவிட்டார்கள். அதன் பின்னர் அமீர் மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றுவார்களா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அப்படி இருக்கும்போது வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பு என்பது எப்படியும் அடுத்த ஆண்டு தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது, அமீர் மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றும் போது எந்த அளவுக்கு அவர்களுக்குள் பிணைப்பு இருக்கும் என்று எல்லாம் பல கேள்விகள் இருந்தது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக மௌனம் பேசியதே படத்தின் ரீ ரிலீஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் அமீர், சூர்யா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் என மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











