அடுத்த மாதமே சூர்யா படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.. சூரரைப் போற்று இந்தி ரீமேக் டிரெய்லர் இதோ!
மும்பை: சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை சுதா கொங்கரா சர்ஃபிரா (Sarfira) எனும் தலைப்பில் இயக்கியுள்ளார். அதன் டிரெய்லர் தற்போது வெளியானது. சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை குவித்தது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல விருதுகளை அந்த படம் குவித்த நிலையில் அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. சூரரைப் போற்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அதில் அப்படியே சூர்யாவுக்கு பதில் அக்ஷய் குமார் நடித்தது போலவே டிரெய்லர் உருவாகி உள்ளது.
அக்ஷய் குமாருக்கு வெற்றி கிடைக்குமா?: அக்ஷய் குமார் நடிக்கும் படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சர்ஃபிரா திரைப்படம் அவருக்கு வெற்றியை தருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு 300 கோடி பட்ஜெட்டில் வெளியான படே மியான் சோட்டே மியான் படம் கூட அக்ஷய் குமாருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், சூரரைப் போற்று படத்தின் கதை சூப்பரான கதை என்பதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவை பார்த்தீங்களா?: சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் சரத்குமார் சீனியர் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், சூர்யா ஒரு சிறப்பான தோற்றத்தில் வந்து செல்லும் காட்சி தற்போது வெளியான டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ள சூரரைப் போற்று இந்தி ரீமேக் அடுத்த மாதம் தியேட்டரில் வெளியாகும் நிலையில், சூர்யா ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.
இந்தியன் 2வுடன் கிளாஷ்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்த அக்ஷய் குமார் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துடன் தனது சர்ஃபிரா படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார். சூர்யா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இந்தியன் 2 வெளியாகும் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
சுதா கொங்கரா இந்தியில் வெல்வாரா?: சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து சுதா கொங்கரா ஆரம்பித்த புறநானூறு படம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலிவுட்டில் அக்ஷய் குமாரை இயக்கி உள்ள சுதா கொங்கரா அங்கேயும் தனது முத்திரையை பதிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படம் தமிழில் வெற்றி பெற்ற நிலையில், இந்தியில் வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், சூரரைப் போற்று இந்தி ரீமேக் படம் எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











