சினிமாவில் 21 ஆண்டுகள் நிறைவு: அப்பா கைவிட்டும் சோதனையை சாதனையாக்கிய சூர்யா
சென்னை: சூர்யா நடிக்க வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அப்பா சிவக்குமார் திரையுலகில் பெரிய ஆளாக இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் முன்னேறியவர் சூர்யா. சிவக்குமாரின் பெயரை பயன்படுத்தாமல் திரையுலகில் வளர்ந்தார் சூர்யா.
சூர்யா நடித்த முதல் படமான நேருக்கு நேர் 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ரிலீஸானது.

சூர்யா
நேருக்கு நேர் படம் ரிலீஸான போது சிவக்குமார் பையன் சூர்யா என்று ரசிகர்கள் கூறினார்கள். இன்றோ சூர்யாவின் அப்பா சிவக்குமார் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் சூர்யா. நடிப்பில் மட்டும் அல்ல கெட்டப்புகளிலும் வித்தியாசம் காட்டுவார் சூர்யா என்று பெயர் எடுத்திருக்கிறார். சினிமாவில் நீ வளர நான் உதவ மாட்டேன், நீயாக முன்னேறி வா என்று சிவக்குமார் சூர்யாவிடம் தெரிவித்திருந்தார்.

ஓட்டம்
நடிக்க வந்த புதிதில் சூர்யாவுக்கு டான்ஸ் ஆட வராது. அவரை ஓட விட்டே பாடலை படமாக்கினார்கள். இதை பலரும் கிண்டல் செய்தார்கள். மக்களின் கிண்டலை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு நடனம் கற்று இன்று அசத்தலாக ஆடுகிறார். அவரின் உயரத்தையும் விமர்சித்தார்கள். உயரம் முக்கியம் அல்ல திறமையும், நல்ல குணமும் தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார்.

சமூக சேவை
படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்து வருகிறார். மேலும் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை, எளிய மாணவ, மாணவியரின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். தான் பெரிய ஹீரோ என்ற ஈகோ இல்லாமல் தன் மனைவி ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸுக்கு வழிவகை செய்தார். கணவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று பேசும்படி நடந்து கொள்கிறார்.

அப்பா
நான் இதுவரை சூர்யாவுக்கு ஒரு கப் காபி கூட போட்டுக் கொடுத்தது இல்லை. இருப்பினும் அவர் அதை எல்லாம் எதிர்பார்த்தது இல்லை. சமையல்காரர் வேலைக்கு வராவிட்டால் பதறிவிடுவார். அந்த அளவுக்கு என் சமையல் மீது அவருக்கு பயம் என்று ஜோதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மகள் தியா, மகன் தேவுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் குடும்பத்துடன் இருக்கிறார். அவ்வப்போது அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்.

ரசிகர்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர். இதை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளித்து அவர்களை சமூக வலைதளங்களில் விளாசியதுடன் போராட்டமும் நடத்தினார்கள். யாரையும் திட்ட வேண்டாம், விட்டுவிடுங்கள், இதை பெரிதாக்க வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறி தனது ரசிகர்களை சமாதானம் செய்தார் சூர்யா.


Click it and Unblock the Notifications











