Suriya On Jyothika - எனக்காக அவங்க ரொம்பவே தியாகம் செஞ்சிருக்காங்க - சூர்யா உருக்கம்
சென்னை: Suriya On Jyothika (ஜோதிகா குறித்து சூர்யா உருக்கம்) நடிகர் சூர்யா விருது வழங்கும் விழாவில் உருக்கத்துடன் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சூர்யாவும், ஜோதிகாவும் இயக்குநர் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதல்முதலாக இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்த முதல் படத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பல வருடங்கள் காதலித்து வந்த அவர்கள் வீட்டு சம்மதத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்ட கடந்த 2006ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர்.

காதலுக்கு அடையாளம்: கோலிவுட்டில் சிறந்த காதல் ஜோடி என்று பெயர் எடுத்தவர்கள் சூர்யாவும், ஜோதிகாவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், ஒருவர் மற்றொருவரை சமமாக நடத்தியும், மனதார பாராட்டுவதும் என காதலுக்கு அடையாளமாக இருக்கிறார்கள் இரண்டு பேரும். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அவரது ரீ என்ட்ரிக்கு சூர்யா ரொம்பவே ஊக்கமாக இருந்தார் என ஜோதிகாவே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

சிறந்த நடிகர் சூர்யா: இந்தச் சூழலில் தனியார் ஊடகம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு கிடைத்தது. அதேபோல் அந்தப் படத்துக்கு மொத்தமாக ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன. விருதை பெற்றுக்கொண்ட சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சூர்யா உருக்கம்: தொடர்ந்து பேசிய அவர், "இந்த விருதை எனது மனைவி ஜோதிகாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் எனக்காக நிறையவே தியாகங்களை செய்திருக்கிறார். குழந்தைகளை அவர் கவனித்துக்கொண்டு என்னை நடிப்பில் கவனம் செலுத்த வைத்தார். என் வாழ்க்கையில் எப்போதுமே எனக்கு ஆதரவாகவும், துணையாகவும் அவர் இருந்துவருகிறார். அதுமட்டுமின்றி என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதில் ஜோதிகா ஒரு பகுதியாக இருக்கிறார்" என்றார்.

பாலிவுட்டில் ஜோதிகா: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் ஜோதிகா பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனையொட்டி சூர்யாவும், ஜோதிகாவும் மும்பையில் வீடு ஒன்று வாங்கி அங்கு செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. மும்பை வீட்டில் சூர்யா இருக்கும் வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











