Karuppu: கருப்பு ரிலீஸ் இல்லை?.. எங்களைப் பார்த்தால் எப்படி தெரியுது? கோபத்தின் உச்சத்தில் சூர்யா ரசிகர்கள்
சென்னை: சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கருப்பு. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், டிரைலர் உள்ளிட்ட அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி வெளியான படமான ரெட்ரோ படம் தியேட்டரில் ஆவரேஜ் படமாகத்தான் போனது என்பதால், கருப்பு படம் சூர்யாவின் கம்பேக் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்.
படத்தின் புக்கிங் தொடங்கியதுமே இணையத்திலும் நேரடியாக தியேட்டருக்குச் சென்றும் படத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இது மட்டும் இல்லாமல், தமிழ்நாடு அரசு நள்ளிரவு 2 மணி வரை படத்தை திரையிட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். திரைப்பட டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் செயலிகளான புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட் உள்ளிட்ட செயலிகளில் புக்கிங் அள்ளியது. வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் புக்கிங் சிறப்பாக சென்று கொண்டு இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல், சில நெருக்கடியால் படம் வெளியாகவில்லை என்ற சூழல் உருவானதும், ரசிகர்கள் பலரும் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பல பதிவுகள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர் ஒருவர், “ எனக்கு காதல், குடும்பம், வேலை என வாழ்க்கையில் எல்லாமே மிகவும் நன்றாக சென்று கொண்டு உள்ளது. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதே நீ மட்டும்தான் சூர்யா. நீ தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்த போதும் கூட ஒரு நாளிலும் ஏன் உனது ரசிகராக இருக்கிறோம் என்று நினைத்ததே இல்லை. ஆனால், இப்போது யோசிக்க வைத்துவிட்டாய்” என்று கூறி உள்ளார். இவரது இந்த பதிவில் சூர்யாவையும் டேக் செய்துள்ளார்.
தயவு செய்து வேண்டாம்: தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவின் போஸ்ட்க்கு, ரசிகர் ஒருவர், “ தயவு செய்து வரும் காலங்களில் சூர்யா மாதிரியான பெரிய நடிகர்களுடன் இணைந்து நீங்கள் பணியாற்ற வேண்டாம். 9 மணி காட்சி கேன்சல் என்று கூறும் நீங்கள், மதியம் காட்சி படம் வெளியிடப்படுமா? படம் இன்று வெளியாகுமா? வெளிநாடுகளில் வெளியாகுமா? புக்கிங் ஆகுமா? என்பது போல மிகத் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சினிமாவை விட்டு: மற்றொரு ரசிகர் சூர்யாவை டேக் செய்து, “ மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை உங்களுக்காக செலவிடுகிறார்கள், அதற்காக நன்றியுடனும் பொறுப்புடனும் இருங்கள். உங்கள் குடும்பத்தினரை வளப்படுத்த உங்கள் பேராசை மற்றும் சுயநல எண்ணம் போன்றவை உங்கள் சினிமா வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கள் மன நிம்மதியையும் கெடுக்கிறது. மிகவும் பொறுப்பான மனிதராக இருங்கள், உங்கள் திவாலான உறவுக்காரர்களின் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வெளியே வந்து மற்றவர்களுடன் இணைந்து படம் எடுங்கள், அல்லது சினிமாவை விட்டே சென்றுவிடுவது ரொம்ப நல்லது.
நடுத்தெருவில்: உங்கள் சினிமா வாழ்க்கையைப் போல எங்களையும் நடுத்தெருவில் நிறுத்தாதீர்கள். இந்த 3 மணி நேர பொழுதுபோக்கைத் தவிர எங்களுக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது. கல்யாண வீடு போல இருக்க வேண்டிய ரசிகர்களை இப்போது துக்க வீடு போல மாற்றிவிட்டீர்கள். முதலில் உங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். உங்கள் அன்பனா ரசிகன் என்று சொல்லப்படுபவனை விட நாகரிகமான வார்த்தைகளில் என் கோபத்தை வெளிப்படுத்தியிருக்க முடியாது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications