சஞ்சய் ராமசாமி லவ்வுனா சும்மாவா.. ரீ ரிலீஸில் தியேட்டரயே அதிர வைக்கும் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் எல்லோராலும் கொண்டாடப்படும் காதல் கதைகளில் ஒன்று கஜினி திரைப்படம். சஞ்சய் ராமசாமி மற்றும் கல்பனாவின் காதல் கதையை இன்றைக்கும் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஸ்டோரியாகவும் ஸ்டேட்டஸ் ஆகவும் வைக்கும் இளைஞர் பட்டாளம் உள்ளது.
குறும்புக்கார பெண் கதாபாத்திரமான கல்பனா கதாபாத்திரத்திற்கு அசின் அச்சு அசலாக பொருந்திப் போயிருந்தாலும் காதலுக்காக தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொள்ள தயங்காத சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் சூர்யா ரசிகர்கள் மனதை வென்றிருப்பார். இதனாலேயே இவர்களது காதல் கதை இன்றைக்கும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு காதல் கதையாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் இரண்டு கெட்டப்புகளில் சூர்யா அட்டகாசமாக நடித்திருப்பார்.

படத்தின் கிளைமாக்ஸில் சூர்யாதான் சஞ்சய் ராமசாமி என தெரிந்து கொள்ளாமலேயே அசின் மரணிக்கும் காட்சி இன்றைக்குப் பார்த்தாலும் கண் கலங்க வைக்கும். இவர்களின் நடிப்பிற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் உயிரோட்டமாக அமைந்திருக்கும். படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் இந்த படம் மக்களிடம் எளிதில் சென்றடைய பாடல்களும் ஒரு காரணமாக மாறியது.

கஜினி ரீ ரிலீஸ்: இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா அசின் மனோபாலா, சத்யன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கஜினி திரைப்படம் இன்றைக்கு அதாவது ஜூன் மாதம் ஏழாம் தேதி ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. கஜினி படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவின் திருவனந்தபுரத்திலும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சூர்யாவுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாலும் இருப்பதால் கேரளாவிலும் தமிழ்நாட்டைப் போல் கஜினி படத்தை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்றைக்கு இந்தியன் படத்தின் முதல் பாகமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் சக்கைபோடு போட்ட இந்த படம் இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டது. அதில் அமீர் கான் நடித்திருந்தார்.

நடிக்க மறுத்த அஜித்?: கஜினி திரைப்படத்தை முதலில் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்க முடிவு செய்திருந்தார். அஜித் குமாரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு போட்டோ சூட்டில் கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் அஜித் இறுதி கட்டத்தில் வெளியேறியதால் இந்த படம் சூர்யாவுக்கு கை மாறியது. இது மட்டுமில்லாமல் சூர்யாவை அடுத்த கட்டத்திற்கும் இந்த படம் கொண்டு சென்று அவரது மார்க்கெட்டையே வேறு தரத்திற்கு உயர்த்தியது. முதலில் இந்த படத்திற்கு மிரட்டல் என பெயர் வைக்கப்பட்டது என்கிற தகவலும் இணையத்தில் இன்றும் உலா வருகிறது.

ரீ ரிலீஸ் ட்ரெண்ட்: சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ரஜினியின் பாபா கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, விஜயின் கில்லி, அஜித்தின் தீனா (ஏ.ஆர். முருகதாஸ் படம்) உள்ளிட்ட திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் விஜயின் கில்லி ரீ ரிலீசில் மட்டும் ரூபாய் 15 கோடிக்கு மேல் வசூல் செய்தது. வரும் 22 ஆம் தேதி தனது ஐம்பதாவது பிறந்தநாளை விஜய் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் விஜயின் துப்பாக்கி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்தையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரீ ரிலீஸ் வரிசையில் நடிகர் சூர்யாவும் இணைந்து கொண்டுள்ளார். சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த பல ஹிட் படங்களில் கஜினிக்கு எப்போதும் ரசிகர்கள் அதிகம். இந்தப் படத்தை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி பேமிலி ஆடியன்ஸும் படம் வெளியான 2005 ஆம் ஆண்டில் கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications











