கங்குவா கொடுத்த மொரட்டு அடி.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உதவும் சூர்யா?.. இது என்ன புது கதை
சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த வருடம்வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணமே சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும்தான் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதற்கு காரணம் அவர்கள் இரண்டு பேருமே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தை பற்றி பேசி ஓவராக ஹைப் ஏற்றிவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு பெரிய கடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சூர்யாவை வைத்து சிவா கங்குவா படத்தை இயக்கினார். அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படம் ரசிகர்களை ஏமாற்றியது. மேலும் படத்தை ரசிகர்கள் வைத்து செய்துவிட்டார்கள். 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று சொன்ன ஞானவேல் ராஜா கூறினார். சூர்யாவோ, கங்குவா படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்று இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் மூக்கின்மேல் விரலை வைக்கும் என்று கூறினார். அதேபோல் படக்குழுவினர் எக்கச்சக்க பில்டப்புகளை ஏற்றிவிட்டார்கள்.

காட்டமான ஜோதிகா: ஆனால் படத்தின் ரிசல்ட்டோ தலைகீழாக இருந்தது. 200 கோடி ரூபாய்கூட படம் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சகர்கள் எல்லாம் கங்குவாவை பிரித்து மேய்ந்துவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க ஜோதிகாவோ படத்துக்கு சப்போர்ட் செய்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.
இதுவரை பார்க்காத வேலை: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
ஒன்றும் செய்யவில்லை: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

புதிய தகவல்: இந்நிலையில் கங்குவா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படம் சரியாக வசூல் செய்யாததால் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கு 143 கோடி ரூபாய் அளவில் கடன் வந்துவிட்டதாகவும்; அதன் காரணமாக கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்வதில் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கங்குவாவால் ஏற்பட்ட கடனை அடைத்தால்தான் ஞானவேல் ராஜாவால் கார்த்தியின் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமென்ற நிலை ஏற்பட்டிருக்கிறதாம். இதன் காரணமாக அவர் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
உதவி செய்யும் சூர்யா: அதன்படி ஞானவேல் ராஜாவுக்கு உதவி செய்யும் வகையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க சூர்யா முடிவு செய்திருக்கிறாராம். அந்தப் படங்களுக்காக சம்பளம் எதுவும் வாங்குவதில்லை என்கிற முடிவையும் அவர் எடுத்திருக்கிறாராம். மேலும் இந்த இரண்டு படங்களையும் தரமான படங்களாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததன் காரணமாக தெலுங்கு மற்றும் மலையாள இயக்குநர்களிடம் அவர் கதைகள் கேட்டுவருவதாகவும் மிக விரைவில் அந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் திரைத்துறையில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஜோதிகா இன்னமும் காட்டம்: முன்னதாக ஜோதிகா ஹிந்தியில் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சிரீஸில் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கங்குவா படத்துக்கு வந்த மோசமான விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காட்டமான ஜோதிகா பேசுகையில், " எனக்கு மோசமான படங்கள் மீதுதான் பிரச்னை. தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் வணிக ரீதியான மோசமாக இருக்கக்கூடிய படங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தப் படங்கள் நன்றாக ஓடியிருக்கின்றன. நல்ல விதமான விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றன. ஆனால் எனது கணவர் சூர்யா நடித்த கங்குவா படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன.
அது எனக்கு வருத்தம்தான்: கங்குவா படத்துக்கு அப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தபோது எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது. படத்தின் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருந்திருக்கலாம். மக்களிடம் ஒர்க் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக படத்தில் பல புதிய முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. கங்குவா திரைப்படம் ஒரு தனித்துவமான திரைப்படம். ஆனால் விமர்சிக்கப்பட வேண்டிய சில படங்களை விட்டுவிட்டு கங்குவா படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அது என்னை ரொம்பவே பாதித்தது. கங்குவா பட விஷயத்தில் ஊடகங்களும் விழிப்புணர்வோடு இருக்கவில்லை.அதுவும் எனக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது" என்றார்.
களத்தில் குதித்த நெட்டிசன்ஸ்: ஜோதிகாவின் இந்தப் பேச்சு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது சூர்யா நடித்த எத்தனையோ நல்ல படங்களை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். நன்றாக இல்லாத கங்குவாவை நன்றாக இல்லை என்றுதான் சொல்ல முடியும். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா குறித்து ஓவர் ஹைப் ஏற்றிவிட்டார். அவர் மட்டும் பட ப்ரோமோஷனில் கொஞ்சம் வாயை குறைத்திருந்தால் இவ்வளவு ட்ரோல்களை அந்தப் படம் சந்தித்திருக்காது. எனவே ஜோதிகா முதலில் ஞானவேலுவைத்தான் அடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரசிகர்கள் மீதும், விமர்சகர்கள் மீதும், ஊடகங்கள் மீது பழி போட கூடாது என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள்.
சூர்யாவின் இப்போதைய படம்: சூர்யா இப்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதனை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். சூர்யாவுக்கு ஒரு ஹிட் படம் அமைந்து வருட கணக்கில் ஆகிவிட்டதால் கண்டிப்பாக இந்த மூன்று படங்களும் ஹிட்டாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











