Vaadivaasal - தாமதமாகும் வாடிவாசல்.. சூர்யா எடுத்திருக்கும் முடிவு என்ன தெரியுமா?
சென்னை: Vaadivaasal (வாடிவாசல்) வாடிவாசல் படம் தாமதமாவதை அடுத்து சூர்யா அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது
வெற்றிமாறன் கடைசியாக விடுதலை படத்தை இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்தில் நடித்த சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதேபோல் இளையராஜா இசையை ஒருதரப்பினர் பாராட்ட சிலர் விமர்சிக்கவும் தவறவில்லை. எது எப்படியோ படத்தை பலரும் ரசிக்க செய்தனர் என்பது நிதர்சனம்.

இரண்டாம் பாகம்: விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றிமாறன் ஏற்கனவே ஷூட் செய்து முடித்துவிட்டார். ஆனால் முதல் பாகத்துக்கு வந்த விமர்சனத்தை அவர் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இரண்டாவது பாகத்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டும் என முடிவு செய்து மேலும் சில நாட்கள் படத்துக்கான ஷூட்டிங்கை மீண்டும் வைத்திருக்கிறார். எனவே அந்தப் படம் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட தொடக்கத்திலோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல்: இதற்கிடையே அசுரன் படத்தை முடித்த பிறகே சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் கமிட்டானார் வெற்றி. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை மையப்படுத்தி அந்தப் படம் உருவாகவிருக்கிறது. கலைப்புலி தாணு படத்தை தயாரிக்கிறார். இதற்கான டெஸ்ட் ஷூட் பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த வீடியோ இணையத்தில் படு ட்ரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
வாடிவாசல் திறக்குமா திறக்காதா?: ஆனால் இடையில் விடுதலை படத்துக்கு வெற்றிமாறன் செல்ல அங்கு அவர் லாக் ஆகிவிட்டார். இருப்பினும் வாடிவாசலுக்கான் சிஜி பணிகள் எல்லாம் லண்டனில் ஜரூராக நடந்துவருவதாகவும் படம் நடப்பது உறுதி என்றும் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன. இருப்பினும் அதற்கு பிறகு படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. எனவே வாடிவாசல் திறக்குமா திறக்காதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழ ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையே வாடிவாசல் படத்திலிருந்து ஜிவி பிரகாஷை வெற்றிமாறன் நிக்கவிருக்கிறார் என்ற தகவல் ஒன்றும் உலாவியது.
சூர்யா எடுத்திருக்கும் முடிவு: வாடிவாசல் படம் இப்போதைக்கு தொடங்கப்படாது என சூர்யா நினைப்பதால் கங்குவா படத்தை முடித்த பிறகு உடனடியாக சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதுகளையும் அள்ளியது. எனவே இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணையவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தை சூர்யா 2டி எண்ட்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











