5000 பட்டதாரிகளை உருவாக்கிய சூர்யா.. தன் மகளை சும்மா விடுவாரா? தியா பட்டமளிப்பு விழாவில் சிவகுமார்
மும்பை: நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதியரின் மகள் தியா. இவர் தனது உயர்கல்விக்காக மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் சேர்ந்தார். இதனால் சூர்யா மற்றும் ஜோதிகா மொத்தமாக மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் இன்று அதாவது மே 30ஆம் தேதி தியா படித்த பள்ளியில் அவருக்கு பட்டமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை சூர்யா மற்றும் ஜோதிகா மிகவும் ஆனந்தமாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பமாக மும்பைக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் இவ்வாறு மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கு காரணம், ஜோதிகாவுக்கும் சிவக்குமாருக்கும் சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது, அதனால்தான் ஜோதிகா மும்பைக்கு சென்று விட்டார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் வந்தது. அதே நேரத்தில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையிலுமே பிரச்னை, அதனால்தான் இருவரும் தனித்தனியாக உள்ளார்கள் என்றெல்லாம் பேச்சுகள் எழுதது. ஆனால் பேட்டி ஒன்றில் பேசுகையில் சூர்யா, தனது மகளின் படிப்புக்காக மும்பைக்கு குடிபெயர்ந்து உள்ளோம் என்று கூறினார். அதன் பின்னர் சலசலப்புகள் குறைந்தது.

சூர்யா - ஜோதிகா: இது மட்டும் இல்லாமல், கங்குவா படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர், ஏற்பட்ட சூர்யா மீதான விமர்சனங்களின் போது, சூர்யாவுக்கு ஆதரவாக ஜோதிகா பேசினார். அதன் பின்னரே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்ற பேச்சுகள் முற்றிலும் நின்றது. இப்படியான கிசுகிசுக்களுக்கு மிகவும் காரணமாக அமைந்த விஷயங்களில் ஒன்று இவர்களின் மகள் தியா, இயக்கிய ஆவணப்படம் விருது பெற்றது. அதை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் அதில் சூர்யாவை டேக் செய்யவில்லை. இது மட்டும் இல்லாமல், சூர்யா சில நாட்களுக்குப் பின்னரே தனது மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

தியா பட்டமளிப்பு விழா: இந்நிலையில் இன்று சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்களது மகளின் பட்டமளிப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்கள். மேலும் இது தொடர்பாக அவர்கள் பகிர்ந்த வீடியோவுக்கு, " இப்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. உனது முடிவுகள் எப்போதும் உனது நம்பிக்கைகளை பிரதிபலித்துக் கொண்டே இருக்கட்டும். பயத்தை அல்ல. அம்மா மற்றும் அப்பாவின் வாழ்த்துகள் உனக்கு எப்போதும் உள்ளது தியா என்று பதிவிட்டுள்ளார்கள்.

குடும்பம்: இந்த பட்டமளிப்பு விழாவில், சூர்யா - ஜோதிகா மட்டுமல்லாமல், சூர்யாவின் பெற்றோர்களான நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி, அதேபோல் ஜோதிகாவின் பெற்றோர்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் சூர்யாவின் மகன் தேவ் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள், அகரம் அறக்கட்டளை மூலம் 5000க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளை பட்டதாரிகளாக மாற்றிய சூர்யா தனது மகளை சும்மா விடுவாரா, இந்த குடும்பம் நன்றாக இருக்கட்டும் என்று பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











