Kanguva Booking: என்னங்க எல்லாம் கம்பெனி கலராவே இருக்கு.. வெளிமாநிலங்களில் கங்குவா போனி ஆகல போலயே!
சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லை உலக சினிமா வரலாற்றிலேயே ஓவர் பில்டப்களுக்கு மத்தியில் வெளியான படங்கள் படு தோல்வியைச் சந்தித்துள்ளன. மக்கள் மத்தியில் இயல்பாகவே எதிர்பார்ப்பு ஏற்பட்டு, அதன் பின்னர் படம் வெளியாகின்றது என்றால் அப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சில தரமான படங்கள் டீசெண்ட்டான புரோமோசனுக்குப் பின்னர் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் புக்கிங் படக்குழுவுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சூர்யாவின் கங்குவா படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று, பல்வேறு சி.ஜி பணிகள் எல்லாம் நடைபெற்றது. படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தில் ரிலீஸ் தேதி முதலில் அக்டோபர் மாதம் 10ஆம் தேதியாக இருந்தது. அதன் பின்னர் அந்த தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகின்றது என அறிவிப்பு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதிதியை நவம்பர் 14ஆம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்தது.

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புக்கிங் தமிழ்நாட்டில் சிறப்பாக சென்று கொண்டு உள்ளது எனலாம். பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் முழுவதுக்குமான காட்சிகளுக்கு பெரும்பாலும் 90 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே புக்கிங் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பல தியேட்டர்களில் காலை 9 மணிக் காட்சிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் புக்கிங் ஆகிவிட்டது. பல ரசிகர்கள் படத்தினை அதிகாலை 4 மணிக்கே பார்க்கவேண்டும் என ஆந்திராவுக்கு படையெடுத்து வருகின்றனர். சிலர் அதிகாலை காட்சியாவது பார்க்கவேண்டும் என கேரளாவுக்குச் சென்றுவிட்டனர்.

ஓவர் பில்டப்: படம் 3டி தொழில்நுட்பத்தில் திரையிடப்படவுள்ளது. படத்திற்கு படக்குழு தரப்பில் இருந்து குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் அளித்த பெரும்பான்மையான பேட்டிகளில் படம் குறித்து பில்டப்களைக் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இவை அனைத்தும் ஓவர் பில்டப்களாக திரையுலகில் பார்க்கப்பட்டது.

படத்தின் ட்ரைலர் வெளியாகி சூர்யா ரசிகர்களைக் கடந்து மற்றவர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. ஞானவேல் ராஜா தரப்பில் படம் ரூபாய் 2000 கோடிகள் வசூல் செய்யும் எனவும், படத்தினை பாலிவுட் உலகத்தினர் மிகவும் கூர்மையாக கவனித்து வருவதாகவும் கூறினார்.

இரண்டு பாகங்கள்: மேலும் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது எனவும், படத்தின் முதல் 20 நிமிடங்கள் மட்டும்தான் சமகாலத்தில் நடைபெறுவதைப்போல் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக படக்குழு அறிவித்தது. படத்திற்காக படக்குழு இந்தியா முழுவதும் மெட்ரோ நகரங்களில் பெரும் புரோமோசன் வேலைகளில் ஈடுபட்டது. தமிழ்நாட்டினைக் கடந்தும் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக படக்குழு தெரிவித்தது.

ப்ரீ புக்கிங்: ஆனால் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி சில நாட்கள் ஆகியும் படத்திற்கான புக்கிங் என்பது தமிழ்நாட்டினைக் கடந்து மற்ற மாநிலங்களில் வெகு சுமாராகத்தான் உள்ளது என்றுகூட சொல்ல முடியவில்லை. படத்தின் புக்கிங் என்பது மிகவும் மோசமாக உள்ளது.

குறிப்பாக மும்பை, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் படத்தின் ப்ரீ புக்கிங் 10 சதவீதம் கூட இதுவரை புக்கிங் ஆகவில்லை. இதே நிலைதான் டெல்லி, கொச்சி போன்ற நகரங்களிலும் உள்ளது. பெங்களூரைப் பொருத்தவரை சில தியேட்டர்களில் மட்டும் ஓரளவுக்கு புக்கிங் ஆகியுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள், கங்குவா படத்தின் புக்கிங், தமிழ்நாடு தவிர்த்து இந்தியா முழுவதும் கம்பெனி நிறத்தில் (ஸ்டூடியோ க்ரீன்) உள்ளது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications