Kanguva Booking: தமிழ்நாடு முழுவதும் ஏகபோக புக்கிங்..வசூலை தாறுமாறாக தொடங்கிய சூர்யாவின் கங்குவா!
சென்னை: சூர்யா நடிப்பில் தியேட்டரில் ஒரு படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. அதேபோல், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கடைசி 10 நிமிடங்களுக்கு மட்டும் வந்து கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவரது நடிப்பில் முழு படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதால், ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள படம் கங்குவா. இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புக்கிங் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு நாளை வெளியாகவுள்ளது. படம் பான் இந்தியா படமாகவும் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டு வெளியாகவுள்ளது.

படம் இந்தியா முழுவதும் சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவதாகவும், படம் ரூபாய் 2000 கோடிகள் வரை அசால்ட்டாக வசூல் செய்யும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தொடர்ந்து கூறிவருகின்றார். அதேபோல் படத்திற்கு தமிழ்நாடு இல்லாமல் அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றது. அதேபோல் சில மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு எல்லாம் படம் திரையிடப்படவுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு வழங்கவில்லை. மாறாக, தமிழ்நாடு அரசு 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இரவு 2 மணி வரை படத்தினை திரையிட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அமரன்: இதனால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் புக்கிங் தொடக்கத்தில் தொடங்கப்படாமல் இருந்தது. இதுமட்டும் இல்லாமல், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதால், திரையரங்க உரிமையாளர்கள் அமரன் படத்தினையே தொடர்ந்து திரையிடலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

கேள்விகள்: இப்படியான தகவல்கள் வெளியான காலகட்டத்தில் தனித் திரையரங்குகளில் மட்டும் கங்குவா படத்திற்கான புக்கிங் தொடங்கியது. இது சூர்யா ரசிகர்களை சோர்வடையச் செய்தது. மேலும், படம் மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் இருந்துவந்தது. ஒருவேளை அமரன் படம்தான் தொடர்ந்து திரையிடப்படவுள்ளதா என்றெல்லாம் ரசிகர்கள் மனதில் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது.

புக்கிங் நிலவரம்: இப்படியான நிலையில், கங்குவா படத்திற்கு மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகளிலும் தற்போது புக்கிங் தொடங்கியுள்ளது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 11.45 மணி வரை படம் திரையிடப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மையான திரையரங்குகளில் முதல் நாளின் அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் 95 சதவீதம் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் இவை அனைத்தும் சென்னை மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாடு நிலவரம். இதனால் படம் வசூல் கணக்கினை சிறப்பாகவே தொடங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு தவிர்த்து, வெளி மாநிலங்களில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளுக்கு இன்னும் 20 சதவீதம் கூட டிக்கெட்டுகள் புக்கிங் ஆகவில்லை. நாளை படம் வெளியாகவுள்ளதால், அதற்குள் டிக்கெட்டுகள் அனைத்தும் புக் ஆகிவிடும் என படக்குழு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications