சூர்யா தான் ரியல் சூப்பர் ஸ்டார்.. சிக்ஸ் பேக் சர்ச்சையே ஓயல அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா?
சென்னை: பீட்சா, இறைவி, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா, மகான் ஆகிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் 'ரெட்ரோ'. இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் என பல நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது. 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் மே 1ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா, நான் இயங்குவதற்கு முக்கிய காரணமே உங்களுடைய அன்புதான். இந்த அன்பு இருந்தால் எப்போதுமே நல்லா இருப்பேன். நான் நடிகன் என்கிற விஷயத்தைத் தாண்டி அகரம் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறேன். இதுக்கெல்லாம் காரணமே நீங்கள் தான். உங்க அனைவருக்குமே பங்கு இருக்கு. உங்களால் தான் வாழ்க்கையில் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். வாய்ப்புகள் கிடைக்கும் தருணத்தில் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சூர்யா தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

ரியல் சூப்பர் ஸ்டார்: ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா கேரளாவில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார். அதில், நான் மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக சூர்யா சாருக்கு ஒரு லவ் லெட்டர் கொடுத்திருப்பேன். அவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் நான் இதை கொடுத்திருக்க மாட்டேன். அவருடைய மனதிற்கும், கண்ணியத்திற்கும், அவர் செய்யும் நல்ல காரியத்திற்காக கொடுத்திருப்பேன். அவரைப் பற்றி எவ்வளவு அதிகம் உங்களுக்குத் தெரிகிறதோ.. அவ்வளவு உங்களுக்கு அவரை பிடிக்கும். அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என பேசி இருந்தார். மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். மலையாளத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வரும் இவர் நடிகராக மட்டுமில்லாமல் 7 படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
சிக்ஸ் பேக் சர்ச்சை: சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யாவின் அப்பா சிவக்குமார், தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன் எவன்டா சிக்ஸ் பேக் வைத்தது என பேசி இருந்தார். இது இணையத்தில் பேசு பொருளான நிலையில், இதற்கு பதில் அளித்த நடிகர் விஷால், முதலில் தனுஷ் தான் பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்தார். அதன் பிறகு நான் வைத்திருந்தேன் என பதிலடி கொடுத்து இருந்தார். இந்த சிக்ஸ் பேக் விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், தற்போது ஜோஜு ஜார்ஜ், சூர்யா தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இருப்பது, என்ன பஞ்சாயத்தை கொண்டுவரப்போகிறதோ தெரியவில்லை என சூர்யாவின் ரசிகர்கள் பயத்தில் உள்ளனர். ஏற்கனவே கங்குவா படத்தில் ஓவராக பேசித்தான் அந்த படம் செமையாக அடிவாங்கியது, அதனால் தான், இந்த முறை சூர்யா அனைத்து நிகழ்ச்சிகளிலும் அடக்கி வாசித்து வருகிறார். அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த பிரச்சனை என அவரது ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











