Karuppu: கருப்பு படத்தில் எது தூக்கல்? எது சொதப்பல்? சூர்யாவுக்கு கம்பேக் தான்.. ஆனாலும்.. ஒரு அலசல்
சென்னை: இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகி, சூர்யா, த்ரிஷா, நட்டி நடராஜ், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மே 15ஆம் தேதி வெளியான படம். ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தை வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இல்லாமல், பல ஆண்டுகளாக பெரிய வெற்றியை ரீச் செய்ய முடியாமல் தவிர்த்த சூர்யாவுக்கு இந்த படம் திருப்திகரமான வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதே நேரத்தில் படத்தில் சறுக்கலே இல்லை சொதப்பலே இல்லை என்றும் கூறிவிட முடியாது.
முதலில் கருப்பசாமி என்ற நாட்டார் தெய்வத்தை தமிழ்நாடு முழுவதும் வணங்கப்படும் காவல் தெய்வத்தை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படத்தின் கதையை உருவாக்கியது என்பது சூர்யாவின் ரசிகர்களைக் கடந்து பொதுமக்களையும் எளிதில் ஈர்க்கக்கூடிய அம்சம் தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காவல் தெய்வமாக கருப்பசாமி இருக்கும், அது ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை எல்லாம் நுட்பமாக படத்தின் கதையோட்டத்தில் கொண்டு வந்தது அருமை.

கருப்பசாமி வரும் காட்சிகளில் எல்லாம் சாய் அபயங்கர் இசையமைப்பில் புகுந்து விளையாடி உள்ளார். கருப்பசாமிக்கான பின்னணி இசையில் உடுக்கையை இன்னும் கூடுதலாக நையாண்டி மேளம், பறை உள்ளிட்டவற்றை கொண்டு மட்டுமே பின்னணி இசையை கொடுத்திருந்தால், இன்னும் இணக்கமான உணர்வைக் கொடுத்திருக்கும். வீணைக்கும் கருப்பனுக்கும் வெகுதூரம், கருப்பன் இந்த மண்ணின் கடவுள். அப்படி இருக்கும்போது இந்த மண்ணை ரத்தமும் சதையுமாக பிரதிபலிக்கும் இசைக் கருவிகளைக் கொண்டு பின்னணி இசை அமைத்திருக்கலாம்.
மண்ணின் தெய்வம்: அதே நேரத்தில், சாய் அபயங்கரின் இசைக்கு ஏற்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், நாட்டார் தெய்வங்களை காட்சிப் படுத்தும் போது, விஷுவலாக இன்னும் கூடுதல் மெனக்கெடல் இருந்திருந்தால், காட்சிகளாக இன்னும் கூடுதல் விருந்து கிடைத்திருக்கும். கடவுள் வரும் காட்சிகளை சிவப்பு கருப்பில் காட்டுகிறேன் என்ற இயக்குநரின் ஐடியா ஒர்க்-அவுட் ஆகி உள்ளது. ஆனாலும் கருப்பன் என்றாலே கிடா வெட்டு, மிகவும் கலர்ஃபுல்லான தோற்றம், பூ அலங்காரம், எலுமிச்சை அலங்காரம் என உச்சகட்ட கோபத்தில் கருப்பனை இன்னும் மூர்க்கமாக காட்டி இருந்தால், அது விஷுவல் பிளாஸ்ட்டாக இருந்திருக்கும். ஒரு பாடல் காட்சியை மட்டும் கலர்ஃபுல்லாக காட்டியது ஓ.கே ரகமாகத்தான் உள்ளது.

பற்றாக்குறை பிளஸ்: சூர்யா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவே பொருந்துகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் வரும் காட்சிகள் மிக குறைவே. அதிலும் அவரது சில படங்களின் ரெஃபரன்ஸைக் காட்டுகிறேன் என்றும், விஜய், அஜித் ரெஃபரன்ஸ்களை காட்டுகிறேன் என்றும் ரசிகர்களை திருப்திபடுத்தி உள்ளனர். ஆனால் இந்த படத்திற்கு இது தேவையா என்றால் அது கேள்விக்குறிதான். மொத்தத்தில் படத்தில் பல பிளஸ் பாய்ண்ட்கள் இருந்தாலும், அவை எல்லாம் பற்றாக்குறை பிளஸ் பாய்ண்ட்களாகவே உள்ளது. ஒன்று கோர்ட் காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்க வேண்டும் அல்லது கருப்பசாமி வரும் காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்க வேண்டும், இரண்டுக்கும் மெனக்கெட்டு இருந்தால் மொத்த படக்குழுவினரின் கெரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படி படத்தில் இல்லாததால், வழக்கமான வெற்றிப் படங்களில் ஒன்றாக கருப்பு படமும் இருக்கும்.


Click it and Unblock the Notifications