சர்வதேச படமான சூர்யாவின் சூரரை போற்று...மீண்டும் ஒரு உலகத்தர அங்கீகாரம்
சென்னை : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரை போற்று. இந்த படம் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழில் டாப் ஹீரோ நடித்து, ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட முதல் படம் சூரரை போற்று படம் தான். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 12 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட இந்த படம், சமீப காலமாக வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக விமர்சனங்களை சந்தித்த படமாக அமைந்தது. இந்த படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி படம் ஓடிடி.,யில் வெளியிடப்பட்டது.

அமேசானில் சாதனை
ஆனால் கடந்த 6 மாதங்களாக இந்திய அளவில் அமேசான் பிரைமில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட சாதனையை சூரரை போற்று படம் பெற்றுள்ளது. தொடர்ந்து முதலிடத்திலும் இருந்து வருகிறது. பிறகு அடுத்த அங்கீகாரமாக சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இந்த படம் இந்திய தரப்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதி பரிந்துரை பட்டியலில் சூரரை போற்று சேர்க்கப்படவில்லை.

சர்வதேச விழாக்களில் வரவேற்பு
இருந்தாலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் சூரரைப் போற்று தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 24 வது ஷாங்காய் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து பல சாதனைகளை சூரரைப் போற்று நிகழ்த்தி வருகிறது.

சர்வதேச அங்கீகாரம்
அந்த வரிசையில் லேட்டஸ்டாக உலக சினிமாக்களுக்கு மட்டுமே இதுவரை கிடைத்து வந்த சர்வதேச அங்கீகாரம் தற்போது சூரரை போற்று படத்திற்கும் கிடைத்துள்ளது. உலகத்தர படங்களுக்கு ரேட்டிங் அளிக்கும் IMDB இணையதளத்தில் சூரரைப் போற்று 3 வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை எந்த இந்திய சினிமாவிற்கும் கிடைக்காத அங்கீகாரம் இதுவாகும்.

3 வது இடத்தில் சூரரை போற்று
All time world films பட்டியலில், The Shawshank Redemption, The Godfather படங்களைத் தொடர்ந்து சூரரை போற்று அமைந்துள்ளது. இந்த படங்கள் முறையே 9.3, 9.2, 9.1 என்ற ரேட்டிங்கை பெற்றுள்ளன. சூரரை போற்று படம் படைத்துள்ள இந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா மீது எதிர்பார்ப்பு
சமூக வலைதளங்களிலும் சூரரை போற்று படக்குழுவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களான நவரசா, வாடிவாசல், சூர்யா 39, சூர்யா 40 ஆகிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படங்களில் சிலவற்றில் வேலைகள் ஏற்கனவே துவங்கபட்டு, படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











