மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் 2 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று.. சந்தோஷத்தில் சூர்யா!
சென்னை: சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் என இரு விருதுகளையும் சூரரைப் போற்று திரைப்படம் தட்டித் தூக்கி இருக்கிறது.
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாறாவாக தன்னை மாற்றிய சுதா கொங்கராவுக்கும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா குழுவுக்கும் தனது நன்றியை நடிகர் சூர்யா ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இரு விருதுகள் கிடைத்திருப்பதை அறிந்த சூர்யா ரசிகர்கள் #SooraraiPottru ஹாஷ்டேக்கை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று சாதாரண மனிதர்களையும் விமானத்தில் அழைத்துச் சென்ற ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை கருவாக கொண்டு நெடுமாறன் ராஜாங்கம் எனும் கதாபாத்திரத்தை உருவாக்கி உருவாக்கப்பட்ட படம்.
கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட சர்வதேச விருது விழாவுக்கு போட்டியிட்ட சூரரைப் போற்று படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விருது கிடைக்கவில்லை.

இந்நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்தியளவில் கலந்து கொண்ட பல்வேறு மொழி படங்களுடன் போட்டியிட்டு நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று சிறந்த திரைப்படமாக வெற்றி மகுடத்தை சூடி இருக்கிறது.
அதே போல, சிறந்த நடிகருக்கான விருதையும் நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஷெர்னி படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்வாகி உள்ளார். தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு சிறந்த சீரிஸ் நடிகை விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











