ஒரு சீன் கூட ‘கட்’பண்ணல.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த விமர்சனம்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சூரரைப் போற்று படத்துக்கு தணிக்கை குழு அதிகாரிகள் தரமான விமர்சனம் ஒன்றை கொடுத்துள்ளனர்.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை தனது விடா முயற்சியால் நடத்திய கோபிநாத்தின் கதை உரிமையை வாங்கி இப்படியொரு படத்தை இயக்கி உள்ளார்.
சமீபத்தில், சூரரைப் போற்று படத்தின் முழு படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தரமான சம்பவம்
சாக்லேட் பாய் மாதவனை வேற லெவலில் டோன் செய்து ரியல் பாக்ஸர் ரித்திகா சிங்கை நடிக்க வைத்து தனது முதல் படத்திலேயே தரமான சம்பவத்தை பண்ணி இறுதிச்சுற்றில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குநர் சுதா கொங்கரா. அந்த படம் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை அள்ளியது.

ரொம்ப கஷ்டம்
சுதா கொங்கரா இயக்கத்தில் பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல என்பது திரைத்துறையினர் அனைவருக்குமே தனது முதல் படத்திலேயே தெரிய வைத்து விட்டார் அந்த சிங்கப்பெண் இயக்குநர். பாலா, கெளதம் மேனன் படங்களில் தன்னை முழுமையாக டிரான்ஸ்ஃபார்ம் பண்ணி நடித்த சூர்யாவுக்கு சூரரைப் போற்று படத்தின் சப்ஜெக்ட் பிடித்துப் போக மீண்டும் கஷ்டப்பட இஷ்டப்பட்டு இணைந்தார்.

பயோபிக்
சாதாரண மனிதராக இருந்து ஏர் டெக்கான் எனும் விமான நிறுவனத்தையே நடத்திய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு படத்தை பயோபிக்காக எடுக்கவே ஆரம்பத்தில் சுதா கொங்கரா நினைத்திருந்தார். ஆனால், அதில் சில கமர்ஷியல் விசயங்களை இணைத்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் அந்த பயோபிக் கதையை புனைவு பயோபிக்காக மாற்றி அமைத்து தற்போது சூரரைப் போற்று படத்தை உருவாக்கி உள்ளனர்.

குடும்பத்துடன் பார்க்கலாம்
சில தினங்களுக்கு முன்பு க்ளீன் ‘யு' சான்றிதழ் சூரரைப் போற்று படத்துக்கு வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் மற்றும் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். சூரரைப் போற்று விரைவில் வெளியாக உள்ள சந்தோஷத்தில் சூர்யா ரசிகர்களும் அதனை டிரெண்ட் செய்தனர்.

தரமான விமர்சனம்
இந்நிலையில், சூரரைப் போற்று படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், அந்த படத்தை வெகுவாக பாராட்டியதாகவும், எந்த ஒரு காட்சியையோ, ஒரு ஷாட்டையோ கூட ‘கட்' செய்ய முடியாத அளவுக்கு சுதா கொங்கரா இயக்கி உள்ளதாகவும், தமிழ் ரசிகர்களை நிச்சயம் இந்த படம் திருப்தி படுத்தும் என்றும் தணிக்கை குழு அதிகாரிகள் முன்வைத்த இந்த விமர்சனங்கள் தற்போது கசிந்து வைரலாகி வருகிறது.

தியேட்டரில்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகமால் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. ஆனால், சூரரைப் போற்று திரைப்படம் முதலில் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும், ரசிகர்களின் கொண்டாட்டத்தை திரையரங்கில் காண தான் காத்திருப்பதாக நடிகர் சூர்யா சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











