Suriya: KV ஆனந்த் வீட்டுல விசேஷம்... சிவகுமாருடன் சென்ற சூர்யா... நெகிழ்ந்துபோன குடும்பம்!
சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. கங்குவாவை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்திலும் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யாவும் அவரது அப்பா சிவகுமாரும் நேரில் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கேவி ஆனந்த் குடும்பத்தினருடன் சூர்யா: சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் அயன். 2009ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படம் சூர்யாவுக்கு தரமான கம்பேக் கொடுத்திருந்தது. சூர்யாவுடன் தமன்னா, பிரபு, ஜெகன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேவி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். கதை, திரைக்கதை, மேக்கிங், ஆக்ஷன், காதல் காட்சிகள், பாடல்கள், சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே அட்டகாசமாக வந்திருந்தன.

விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அயன் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா - கேவி ஆனந்த் கூட்டணியில் மாற்றான், காப்பான் படங்கள் வெளியாகின. அயன் படத்தில் இருந்தே சூர்யா கேவி ஆனந்த் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்நிலையில் கடந்த 2021ல் கொரோனா பாதிப்பால் கேவி ஆனந்த் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பெரும் இழப்பாக அமைந்தது.

இந்நிலையில் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யாவும் சிவகுமாரும் நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கேவி ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை முன்னிட்டு கேவி ஆனந்த் மகளை நேரில் சந்தித்த சூர்யா அவருக்கு அன்பளிப்பு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சிவகுமார், மகாத்மா காந்தி பற்றி தான் எழுதிய சித்திரச் சோலை என்ற நூலை கேவி ஆனந்த் மகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் கேவி ஆனந்த் குடும்பத்தினருடன் சூர்யாவும் சிவகுமாரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் கேவி ஆனந்தின் மகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 1994ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பத் என்ற திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் கேவி ஆனந்த்.

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வென்ற கேவி ஆனந்த், தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், கில்லி, சிவாஜி போன்ற படங்களுக்கும் சினிமோட்டோகிராபி செய்துள்ளார். அதன்பின்னர் கனா கண்டேன் படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்த கேவி ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் படங்களையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











