Suriya: சூர்யாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள்... பிரபாஸை டீலில் விட்ட லோகேஷ் கனகராஜ்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
லியோவை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், தனது ட்ரீம் ப்ராஜெக்ட்டான இரும்பு கை மாயாவி உட்பட மேலும் ஒரு படத்துக்காக சூர்யாவுடன் இணையவுள்ளாராம் லோகேஷ்.

சூர்யாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள்: கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ்ஜும் ஒருவர். இவரது இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோவுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் லியோவுக்குப் பின்னர் கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்கவிருந்தார் லோகேஷ். ஆனால், தற்போது ரஜினியின் தலைவர் 171 படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தசெ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ள ரஜினி, அதன்பின்னர் லோகேஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 171க்கு பின்னர் தான் கைதி 2 தொடங்கும் எனவும் லோகேஷ் கூறியிருந்தார்.
ஆனால், விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்த ரோலக்ஸ் கேரக்டரை, தனி படமாகவே இயக்க பிளான் செய்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். லோகேஷின் இந்த முடிவுக்கு சூர்யாவும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து கைதி 2 ஸ்க்ரிப்ட்டை அப்படியே மாற்றி அதனை ரோலக்ஸ் என்ற பெயரில் இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் சூர்யா - கார்த்தி இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது.
அதாவது சூர்யாவின் ரோலக்ஸ் VS கார்த்தியின் டில்லி கேரக்டர்கள் இடையேயான போர்ஷன் முழுவதும் இந்தப் படத்தில் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் தனது கனவு படமான 'இரும்பு கை மாயாவி' ப்ராஜெக்ட்டை கையில் எடுக்க ரெடியாகிவிட்டாராம். ஏற்கனவே இந்தப் படத்துக்கு சூர்யாவுடன் இணையவிருந்தார் லோகேஷ். ஆனால், அப்போது டேக் ஆஃப் ஆகாமல் போனது இரும்பு கை மாயாவி.
இதனிடையே இந்தப் படத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பிரபாஸை டீலில் விட்ட லோகேஷ், மீண்டும் சூர்யா பக்கமே சென்றுவிட்டார். தலைவர் 171 முடிந்ததும், ரோலக்ஸ், இரும்பு கை மாயாவி என அடுத்தடுத்து இரண்டு படங்களை சூர்யா நடிப்பில் இயக்கவுள்ளார் லோகேஷ். இதில் இரும்பு கை மாயாவி திரைப்படம், The Steel Claw என்ற காமிக் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











