Suriya: ”ஜெய்பீம் நோக்கம் முழுமையடைந்தது... முதலமைச்சருக்கும் அரசுக்கும் நன்றி..” சூர்யா நெகிழ்ச்சி!
சென்னை: சூர்யா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
தசெ ஞானவேல் இயக்கத்தில் உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு வெளியானது.
நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியான ஜெய் பீம், ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி, தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் நோக்கம் முழுமையடைந்தது: சூர்யா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது ஜெய் பீம். 2021ம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப் படத்தை எழுத்தாளர் தசெ ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யாவுடன் மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், இளவரசு, ராஜு முருகன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
1993ம் ஆண்டுவாக்கில் விருதாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் வசித்துவந்த இருளர் பழங்குடியைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். இதன் பின்னணியையும் உண்மையையும் 'ஜெய் பீம்' படமாக இயக்கியிருந்தார் தசெ ஞானவேல். தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையான சமூகமான இருளர் பழங்குடியினர் மீது போலீஸார் நிகழ்த்தும் அதிகார அத்துமீறல்களையும், பொதுச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் ஒரே நேர்கோட்டில் அடுக்கியது ஜெய் பீம்.
மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் இருவரது நடிப்பும் ரசிகர்களிடம் பெரிய பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல், சூர்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கேரக்டர்களும் கவனம் ஈர்த்தன. அதேநேரம் இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சைகளுக்கும் வித்திட்டன. இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசு இருளர் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியது.
இந்நிலையில், ஜெய் பீம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதை சூர்யா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி டிவீட் செய்துள்ள அவர், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல் முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்."
"திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஜெய் பீம் படம் மூலம் பிரபலமான தசெ ஞானவேல் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தலைவர் 170 படத்தை இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











