என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்.. இயக்குநர் வசந்த் பாராட்டுக்கு சூர்யா நன்றி.. வாழ்கிறான் மாறா!
சென்னை: சூரரைப் போற்று படத்தை பார்த்து விட்டு பாராட்டிய இயக்குநர் வசந்துக்கு நன்றி கூறியுள்ளார் சூர்யா.
மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா என டோலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர்களும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் வசந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் தான் சூர்யா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

நெடுமாறன் ராஜாங்கம்
இந்த பாராட்டு உனக்கு இல்லை சூர்யா என இயக்குநர் வசந்த் தனது பாராட்டு கடிதத்தை தொடங்கி உள்ளார். நெடுமாறன் ராஜாங்கத்துக்கு என சொல்லும் இடத்திலேயே சூர்யாவுக்கு மிகப்பெரிய விருது கிடைத்து விட்டது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூரரைப் போற்று படத்தில் மாறாவாகவே வாழ்ந்திருக்கிறாய் என மனதார பாராட்டி உள்ளார் வசந்த்.

விதை நான் போட்டது
நேருக்கு நேர் படத்தில் சூர்யாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த். தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோதிகாவை ஜோடியாக்கினார். தனது பாராட்டு கடிதத்தில், சூர்யா என் விதை என்பதில் பெருமிதம் கொள்கிறேன் எனக் வசந்த் பாராட்டி இருந்தார்.

சூர்யா நன்றி
"உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!! நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி சார்" என சூர்யா இயக்குநர் வசந்த் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவை நடிப்பை பார்த்து விட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டிய நிலையில், இயக்குநர் வசந்தும் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத காட்சி
சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக விமான நிலையத்தில், மரணப்படுக்கையில் அப்பா இருக்கிறார், யாராவது உதவுங்களே என அவர் கெஞ்சும் காட்சியில், சூர்யாவை மறந்து விட்டு அனைவரும் நெடுமாறனை கண்டனர்.


Click it and Unblock the Notifications











