ஜெய்பீம் படத்தை விட வேகமாக.. போகன்வில்லா இயக்குநருடன் இணையும் சூர்யா.. செம அப்டேட்டா இருக்கே!
சென்னை: மலையாளத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற போகன்வில்லா படத்தை இயக்கிய அமல் நீரத் இயக்கத்தில் நடிகர் சூர்யா இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் அந்த படம் அதிவேகமாக உருவாகப்போவதாக வெளியாகி உள்ள தகவலால் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆடிப்போயுள்ளனர்.
நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. விடுதலை 2 படத்தை முடித்துவிட்டுக் கூட சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைவாரா என்பதே சந்தேகமாக உள்ளது.

வாடிவாசல் படத்துக்கு முன்னதாக பாலாவுடன் வணங்கான் படத்தை ஆரம்பித்த சூர்யா பாதியிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர், சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை சூர்யாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
சூர்யா 44 என்ன ஆனது?: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வேக வேகமாக உருவாகி வந்த சூர்யா 44 படம் கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பிறகு சத்தமே இல்லாமல் சைலன்ட்டாகி விட்டது. சூர்யாவின் அடுத்த படத்திற்கான பூஜையும் உடனடியாக போடப்பட்ட நிலையில், ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜியுடன் சாமி படம்: இந்தி ரசிகர்களை கவர வேண்டும் என்றால் சாமி படம் எடுக்க வேண்டும் என்றும் படத்தில் சாமி சம்பந்தப்பட்ட ஆக்ரோஷ காட்சிகள் இடம்பெற வேண்டும் என பல இயக்குநர்கள் ஆன்மிகத்தை அள்ளித் தெளித்து வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்கின்றனர்.

போகன்வில்லா இயக்குநருடன்: இந்நிலையில், 40 நாட்களில் அதிரடியாக போகன்வில்லா பட இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் இணைந்து சூர்யா ஒரு படத்தில் இணையப் போவதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சூர்யா மற்றும் அமல் நீரத் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபபன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான போகன் வில்லா நாளை டிசம்பர் 13ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. தரமான சைக்கோ த்ரில்லர் படங்களை கொடுக்கும் இயக்குநருடன் சூர்யா இணைந்து ஜெய்பீம் படத்தை விட அதிவேகமாக படத்தை முடித்து வெளியிடப் போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











