Suriya: விஜய், தனுஷ் வரிசையில் சூர்யா... எல்லாரும் அந்தப் பக்கமா போனா எப்படி... ரசிகர்கள் வேதனை
சென்னை: சூர்யாவின் கங்குவா திரைப்படம் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் சில தினங்களில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

அதன்பின்னர் சூர்யா நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
விஜய், தனுஷ் வரிசையில் சூர்யா
சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களுக்குப் பிறகு கங்குவா படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் இதற்கு கங்குவா என்ற டைட்டிலை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், 2024 பொங்கல் ஸ்பெஷலாக கங்குவா ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படம் ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பேண்டசியாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கங்குவாவைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக இணையும் இந்தப் படம், ஷூட்டிங் தொடங்கும் முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் பற்றியும் இப்போதே எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஹரி அல்லது தசெ ஞானவேல் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கலாம் என சொல்லப்பட்டது.

ஆனால், சூர்யாவோ ஒரு மாற்றத்திற்காக விஜய், தனுஷ் ஸ்டைலில் களமிறங்கவுள்ளாராம். அதன்படி பிரபல தெலுங்கு இயக்குநரின் படத்தில் ஹீரோவாக நடிக்க பிளான் செய்துள்ளாராம். சில தினங்களுக்கு முன்னர் அந்த தெலுங்கு இயக்குநர் சூர்யாவை நேரில் சந்தித்து கதை சொன்னதாக தெரிகிறது. சூர்யாவும் அந்த கதைக்கு ஓக்கே சொல்லிவிட்டாராம்.
இதனால், வாடிவாசல் படப்பிடிப்பு முடிந்ததும் தெலுங்கு இயக்குநருடன் இணையும் படம் குறித்து சூர்யா அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அடுத்தடுத்து தெலுங்கு இயக்குநர்களுடன் இணைந்து படம் கொடுத்து வருகின்றனர்.
விஜய்யின் வாரிசு, தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படங்களை தெலுங்கு இயக்குநர்கள் தான் இயக்கியிருந்தனர். மீண்டும் இவர்கள் தெலுங்கு இயக்குநர்களுடன் இணையவுள்ளார்களாம். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது புதிய படத்திற்கு தெலுங்கு இயக்குநரை டிக் செய்துள்ளாராம். அதனால், அவர்கள் ரூட்டில் சூர்யாவும் அதிரடியாக இந்த முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், கோலிவுட்டில் திறமையான இயக்குநர்கள் இருக்கும் போது, விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்கள் டோலிவுட் பக்கம் செல்வது நியாயமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும், இன்னும் சூர்யாவின் புதிய திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications