எதற்கும் துணிந்தவன் லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் வேட்டையாடப் போகும் கங்குவா?.. நம்பிக்கையில் ஃபேன்ஸ்!
சென்னை: சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெறவில்லை. அஞ்சான், மாஸ் என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை தவற விட்டன.
சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் பிளாக்பஸ்டர் விமர்சனங்களை பெற்ற நிலையில், ஓடிடியில் அந்த படங்கள் வெளியானதால் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு அடிக்கவில்லை.

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சூர்யா நடிப்பில் கடைசியாக தியேட்டர்களில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ள கங்குவா திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பின் நாயகன் சூர்யா: நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் அவருடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானார். காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரிய அண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், பிரண்ட்ஸ் என பல படங்களில் நடித்து வந்தாலும் நல்ல நடிகர் என்கிற பெயரை எடுக்கவில்லை. ஆனால், அதன் பின்னர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் சூர்யாவுக்குள்ளிருந்த நடிப்பு அரக்கனை வெளியே கொண்டு வந்து நடிப்பின் நாயகனாக அவரை மாற்றியது.
பிளாக்பஸ்டர் படங்கள்: கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன், ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 1 மற்றும் 2 என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், மாற்றான், 7ஆம் அறிவு என பல வித்தியாசமான ரசிகர்களை கவரும் படங்களையும் சூர்யா கொடுத்துள்ளார்.
கங்குவா முதல் நாள் வசூல்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முதல் நாளே அந்த திரைப்படம் 180 கோடி ரூபாய் வசூல் செய்து எதற்கும் துணிந்தவன் படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லியோவை விட அதிகம்: விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் 140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில், அதை விட அதிகமாக சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் பான் இந்தியா அளவில் வசூல் வேட்டை நடத்தும் என்றும் 1000 கோடி வசூல் செய்யும் என்றும் சூர்யா ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்தளவுக்கு வசூல் வேட்டையை சூர்யா படம் நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம், இந்தியன் 2 படங்கள் சொதப்பின. அடுத்ததாக கோட், கங்குவா மற்றும் வேட்டையன் படங்கள் மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











