கடைசி நேரத்தில் இத்தனை கோடி கொடுத்தால் தான் கங்குவா வெளியாகுமா?.. நாலா பக்கமும் சூர்யாவுக்கு சிக்கல்
சென்னை: நடிப்பின் நாயகன் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் (நவம்பர் 14) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மிகப்பெரிய புரமோஷனையும் படக்குழுவினர் செய்துள்ளனர். நடிகர் சூர்யா தனது மற்ற படங்களின் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு கங்குவா படத்தை எப்படியாவது கரைசேர்த்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் புரமோஷன் செய்துள்ளார்.
கங்குவா திரைப்படத்திற்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கை சமீபத்தில் தான் அந்த 55 கோடி கடனை திருப்பிக் கொடுத்து ஒருவழியாக செட்டில் செய்து பஞ்சாயத்தை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், திடீரென பிரபல விநியோகஸ்தரின் மரணம் கங்குவா படத்துக்கு கடைசி நேர சிக்கலாக மாறியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திட்டமிட்டபடி கங்குவா நாளை மறுநாள் வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
அடிமேல் அடி விழுது: கங்குவா திரைப்படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் மிலன் மற்றும் கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் என அடுத்தடுத்து படத்தின் டெக்னிக்கல் டீமில் இருந்தவர்களின் மரணம் ஏற்கனவே நடிகர் சூர்யாவையும் கங்குவா படக்குழுவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தற்போது கங்குவா படத்துக்கு பைனான்ஸ் கொடுத்த அர்ஜுன் லால் என்பவரின் மரணம் பேரிடியாக கடைசி நேரத்தில் கங்குவா தலையில் இறங்கியிருக்கிறது.
20 கோடி கொடுத்தால் தான்: அர்ஜுன் லால் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துக்கள் குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கங்குவா படத்திற்காக அவர் கொடுத்த 20 கோடி ரூபாயை வரும் நவம்பர் 13ம் தேதி (நாளைக்குள்) கொடுத்தால் தான் படத்தை வெளியிட வேண்டும் என அவரது சொத்துக்களை நிர்வகிப்பார் தொடுத்த வழக்கின் காரணமாக மீண்டும் கங்குவா படத்துக்கு சிக்கல் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த பிரச்சனையையும் சரி செய்து படத்தை சொன்ன தேதியில் வெளியிடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
புக்கிங் பெருசா போகல: கங்குவா படத்தைச் சுற்றி ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. முதல் வார வசூலில் 75 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கும் 25 சதவீதம் விநியோகஸ்தர்களுக்கும் என்கிற வாதம் எழுந்துள்ள நிலையில், இன்னமும் கங்குவா படத்தின் டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் தொடங்கவில்லை. சில திரையரங்குகளில் கங்குவா டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும் பெரிதாக ஹவுஸ்ஃபுல் ஆகாத நிலையே உள்ளது. பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ்களில் இன்று அல்லது நாளை தான் டிக்கெட் புக்கிங் தொடங்கும் என்கின்றனர்.
கனமழை காத்திருக்கு: ஏற்கனவே அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் கங்குவா படத்துக்கு மீண்டும் கனமழை பெரிய கத்தியாக மாறும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தமிழ் சினிமாவின் பாகுபலியாக கங்குவா அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள இத்தனை சிக்கலையும் சூர்யா எப்படி சமாளித்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கப் போகிறார் என்பதை காண கோலிவுட் இண்டஸ்ட்ரியே காத்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











