சூர்யாவின் கங்குவா.. தொடர்ந்து அடி வாங்கும் கொடுமை.. ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம்
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் 30 மொழிகளில் ரிலீஸானது. மொத்தம் 10,000 திரைகளில் படம் திரையிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. சூர்யா நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகியிருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அவரது ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு படையெடுத்தனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த பாசிட்டிவ் விமர்சனம் கிடைக்கவில்லை.
அண்ணாத்த படத்தை இயக்கி படுதோல்வியை சந்தித்த சிவா; சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார். ஞானவேல் ராஜா ஹை பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க; தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க திஷா பதானி, போஸ் வெங்கட், பாபி தியோல் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். நிச்சயம் இந்தப் படம் சிவாவுக்கும், சூர்யாவுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். மேலும் ஞானவேல் ராஜாவும் தன்னுடைய பேட்டிகளில் படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றிக்கொண்டிருந்தார்.

2000 கோடி ரூபாய் வசூல்: முக்கியமாக ஞானவேல் ராஜா கொடுத்த சில பேட்டிகளில் இந்தப் படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூலிக்கும்; அதற்கான ஆதாரத்தை நான் ஸ்டூடியோ க்ரீன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவேன் என்று ஓவர் கான்ஃபிடன்ஸில் பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சூர்யாவோ, கங்குவாவை பார்க்கும்போது ரசிகர்கள் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றும் ஒருபடி மேலே சென்று பேசினார். இதனால் படத்துக்கு ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்தாலும்; சொதப்பிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம் இருந்துகொண்டிருந்தது.
படம் ரிலீஸ்: படமானது கடந்த 14ஆம் தேதி உலக அளவில் ரிலீஸானது. மொத்தம் 30 மொழிகளில் 10,000 திரைகளில் படம் ரிலீஸானது. சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். கண்டிப்பாக சிவா சூர்யாவை வைத்து சிறப்பான சம்பவம் செய்திருப்பார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.
அய்யோ கங்குவா: படத்தின் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் தங்களது இருக்கைகளில் நெளிய ஆரம்பித்தார்கள். வாயை பிளந்து பார்ப்பார்கள் என்று சூர்யா சொன்னதெல்லாம் பொய் என்றானது. குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலிருந்தே என்னமோ செய்திருக்கிறார்கள் ஆனால் என்ன செய்திருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை என்று தியேட்டரிலேயே கமெண்ட்ஸை பறக்கவிட்டார்கள். முதல் பாதிதான் அப்படி என்றால் இரண்டாம் பாதி அதைவிட மோசம் என்றும் கூறினார்கள் ரசிகர்கள்.
தொடர் அடி: 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று படக்குழுவினரால் சொல்லப்பட்டாலும் 200 கோடி ரூபாயை வசூலிப்பதே திண்டாட்டமாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் அந்தப் படம் 42 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. இந்தியாவில்தான் இந்த அடி என்றால் வெளிநாட்டிலும் கங்குவா நிலைமை மோசமாகவே இருக்கிறது. வட அமெரிக்காவில் இந்தப் படம் இரண்டு நாட்களில் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியும், சோகமும் அடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











