சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கங்குவா அதிகாலை சிறப்பு காட்சி உண்டு.. எங்கு தெரியுமா?
சென்னை: சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சூர்யா பறந்து பறந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சூழலில் கங்குவா படத்துக்கான அதிகாலை நான்கு மணி சிறப்பு காட்சி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருப்பது கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும்; எவ்வளவு வசூலித்தாலும் அதற்கான ஆதாரத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்கிறேன் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்கள் கங்குவா: கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.
நவம்பர் 14ல் ரிலீஸ்: முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் அன்றைய தினம் வேட்டையன் ரிலீஸானதால் கங்குவா நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று சூர்யா அறிவித்தார். சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதில் கலந்துகொண்ட படக்குழுவினர் சூர்யாவையும், அவரது உழைப்பையும் வெகுவாகவே பாராட்டினார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு சூர்யாவின் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
சூடுபிடிக்கும் ப்ரோமோஷன்: படம் ரிலீஸாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அதில் சூர்யா மும்முரமாக கலந்துகொண்டுள்ளார். முக்கியமாக மும்பையில் நடக்கும் ப்ரோமோஷன் பணிகளில் சூர்யா கலந்துகொண்டு பல விஷயங்களை பேசிவருகிறார். இதற்கிடையே இந்தப் படம் மொத்தம் முப்பது மொழிகளில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. முப்பது மொழிகளில் படம் ரிலீஸாவதும் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
அதிகாலை காட்சி: இந்நிலையில் கங்குவா படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் படத்தின் அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அதற்காக தமிழ்நாடு அரசிடம் மனு அளித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைத்திருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்குமா என்ற ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











