கங்குவா ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு.. ஆனால், சியான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்சயன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் சூர்யா நடிக்கும் சூப்பராக வெளியானாலும் அந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் நடிகர் சூர்யாவின் பெயர் பெரிதாக இடம் பெறவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தின் சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் விநய் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், எப்படியாவது மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த சூர்யா பாலாவின் வணங்கான் படத்திலிருந்தும் வெளியேறி சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.
கங்குவா: சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று தனஞ்செயன் பேட்டி அளித்துள்ளார். தொடர்ந்து கங்குவா படம் குறித்து பல்வேறு விஷயங்களை தனஞ்செயன் தான் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி ரிலீஸ்: ஜூன் மாதம் இந்தியன் 2, செப்டம்பர் மாதம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், அக்டோபர் மாதம் வேட்டையன் என ஒவ்வொரு மாதமும் பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியாகும் என்கிற அப்டேட்டையும் தனஞ்செயன் கூறியுள்ளார்.
எடிட்டிங் தெரிந்த இயக்குநர்: சமீபத்தில் கே.எஸ். ரவிக்குமார் கங்குவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட காட்சியை முழுமையாக பேசி முடிப்பதற்குள் சிவா கட் சொல்லிவிட்டார் என்றும் என்னப்பா இன்னும் முடிக்கலையே என்றேன் 3வது லைன்லயே முடிஞ்சு வேற இடத்துல கன்டினியூ ஆகுது சார் என அவர் சொன்னதும் அவரது எடிட்டிங் அறிவை பார்த்து இது வியந்து போனேன் என பாராட்டியுள்ளார்.
இந்தி பிசினஸ்: ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தை மும்பையில் பெரிய ஆபிஸ் வைத்து அமைக்கப்பட்டுள்ள நிலையில், கங்குவா படத்தின் இந்தி பெல்ட் பிசினஸை பெரியளவில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பல திட்டங்களை வகுத்து வருகிறார் என்றும் கங்குவா வெளியானால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று கூறுகின்றனர்.
முந்தி வரும் தங்கலான்: இந்த ஆண்டு தீபாவளிக்கு கங்குவா திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான்படத்தின் வெளியீட்டையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிளான் செய்துள்ளதாக தனஞ்செயன் கூறியுள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படம் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications